8 வருடங்களுக்குப் பிறகு கிடைத்த வாய்ப்பு, ஒரு இயக்குனரின் வலி

எட்செட்ரா எண்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன்-ஆர்.ரம்யா தயாரித்துள்ள படம் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’.

இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ‘திலகர்’ துருவா ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக ‘பிக் பாஸ்’ புகழ் ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனா பிரேமும் நடித்திருக்கின்றனர்.

இவர்களுடன் ராதாரவி,​ ​சரண்யா பொன்வண்ணன், மனோபாலா, மைம் கோபி, அருள்தாஸ், ராம்ஸ், ஜே.டி சக்கரவர்த்தி என நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளனர். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு அச்சு இசையமைத்துள்ளார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பை கவனித்துள்ளார்.

தயாரிப்பாளர் மதியழகன் பேசும்போது,

“இது எங்களது தயாரிப்பில் உருவாகியுள்ள 8வது படம். சமூக விழிப்புணர்வுடன் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு சென்சார் சர்டி​ஃ​பிகேட் வாங்குவதற்குள் மறைந்திருந்து பார்க்க வைத்துவிட்டார்கள். ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் தருகிறார்கள். ஆனால் இந்தப் படத்திற்கு சான்றிதழே தர மறுத்துவிட்டார்கள். ஒரு நீண்ட போராட்டத்துக்குப்பின்தான் சான்றிதழே பெற முடிந்தது​. இதுவரை 8 படங்கள் எடுத்துள்ளோம். இந்த படம் எங்களுக்கான முத்திரையாக அமையும். இதுபோன்ற சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் படங்களுக்கு மக்களும் மீடியாவும் ஆதரவு தர வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற படங்களைத் தொடர்ந்து தர முடியும்,​” என்றார்..

படத்தின் நாயகன் துருவா பேசும்போது,

“சென்சாரில் சான்றிதழ் கொடுக்க மறுத்து, அது பத்திரிகை மூலமாக செய்தியாக வெளியான போதுதான் இப்படி ஒரு படம் இருக்கிறது என்பதே வெளியே தெரிந்தது. டைரக்டர் ராகேஷ் மத்த எல்லா யூனியன்லேயும் கார்டு வாங்குற அளவுக்கு எல்லா வேலையையும் இறங்கி செஞ்சாரு. ஹீரோயின்கள் இல்லாம நடக்குற சினிமா பங்ஷன் இதுவா தான் இருக்கும்.. என்ன பண்றது ?. ஒரு கதாநாயகி அஞ்சனா பிரேம் ஜப்பான்ல இருக்காங்க.. அவங்க கூட, கூப்பிட்டிருந்தா வந்திருப்பாங்களோ என்னவோ.. இன்​னொரு நாயகி ஐஸ்வர்யா தத்தா இப்ப பிக் பாஸ் வீட்டுல இருக்காங்க, எப்ப வருவாங்களோ யாருக்குத் தெரியும். இந்தப் படத்துல என்னோட அம்மாவா சரண்யா மேடம் வாழ்ந்திருக்காங்க, நானும் வாழ்ந்திருக்கேனான்னு படம் பார்த்துட்டு சொல்லுங்க,” என்றார்.

இயக்கு​நர் ராகேஷ் பேசுகையில்,

“எத்தனையோ போராட்ட செய்திகள் புதுசு, புதுசா தினசரி பேப்பர்ல வந்தாலும், நாள் தவறாம இடம் பிடிச்சுட்டு வர்றது செயின் பறிப்பு சம்பவங்கள் தான். அதுதான் இந்தப்படத்தை எடுக்க என்னை தூண்டுச்சு.

நள்ளிரவு 12 மணிக்கு ஒரு பெண் நகை அணிந்துகொண்டு தனியா நடந்து போனா அதுதான் உண்மையான சுதந்திரம்னு மகாத்மா சொன்னார். ஆனா, இன்னைக்கு பகல் 12 மணிக்கே பெண்கள் ரோட்டுல தைரியமா நடமாட முடியலையே. இதை சொல்லித்தான் படத்தையே ஆரம்பிக்கிறோம்.

என்னுடைய முதல் படம் வெளியாகி எட்டு வருடங்களுக்குப் பின் இந்தப் படம் கிடைத்தது. அதற்காக தயாரிப்பாளர் மதியழகனுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் பத்தாது.

இந்தப் படத்தின் கதாநாயகனாக துருவா அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார். குன்றத்தூர் அருகே படப்பிடிப்பு நடைபெற்ற போது ஓடிவந்த வேகத்தில் தடுக்கி விழுந்து, பின்னர் மீண்டும் எழுந்து ஓடிப்போய் கொஞ்சம் தள்ளி கீழே விழுந்து கிடக்கும் சரண்யா மேடத்தை தூக்க வேண்டிய காட்சியில் அவ்வளவு இயல்பாக நடித்துள்ளார்.

அவர் கீழே விழுந்ததும் நான் கட் சொல்ல முயற்சிக்க, ஒளிப்பதிவாளர் முத்தையா குறுக்கிட்டு என்னை தடுத்துவிட்டார். அதனாலேயே அந்த​க்​ காட்சி ரொம்ப இயல்பாக வந்துவிட்டது. எடிட்டர் ஷான் லோகேஷ் கூட எப்படி இந்த​க்​ காட்சியை தத்ரூபமாக படமாக்கினீர்கள் என வியந்தார். நான் ஒன்னு சொன்னேன், அதை அவங்க சரியா செய்யாததால், அந்த காட்சி கரெக்ட்டா வந்துருச்சுன்னு அவர்கிட்டே சொன்னேன்.

சென்சாரில் நாம் எதற்காக ஒரு காட்சியை எடுக்கிறோம் என​ப்​ புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். மொபைலில் பேசிக்கொண்டே பைக் ஓட்டுனா விபத்துல சிக்குவீங்கன்னு என ஒரு செய்தியை சொல்ல வந்தா, அவர்களோ ரத்தம் சிவப்பாக இருக்கிறது, பச்சை கலருக்கு மாற்றுங்கள் என்கிறார்கள்.

பெண்கள் எப்படி எல்லாம் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு அவர்களது நகைகள் பறிக்கப்படுகிறது என அவர்களை எச்சரிக்கை செய்யும் விதமாக காட்சிகளை அமைத்தால், அந்தக் காட்சிகளை பார்த்துவிட்டு, நீங்களே செயின் அறுக்கும் வழிகளை சொல்லிக் கொடுக்கிறீர்களா என கேட்கிறார்கள்.

நானும் திரைப்பட​க்​ கல்லூரியில் படித்தவன் தான். அதில் சென்சார் என்கிற ஒரு பாடமே இருக்கிறது. உங்களுக்கு சென்சார் ரூல் தெரியுமா என என்னைக் கேட்ட அதிகாரியிடம் அதை படிச்சுட்டு வந்தீங்கன்னா நீங்க டைரக்டர் ஆகியிருக்க வேண்டியது தானே சார்னு திருப்பி​க்​ கேட்டேன். இதை சொன்னதுக்குத்தான் சான்றிதழ் தரமுடியாதுன்னு திருப்பி அனுப்பிச்சிட்டாங்க. அதுக்குப்புறம் போராட்டம் பண்ணி, அந்த டீம் மாறிய பின்னாடி ஒருவழியா சான்றிதழ் வாங்கினோம்,” என்கிறார்.

​​இயக்கு​நர் ராகேஷ் பேசியபோது ஆரம்பத்தில் பேசமுடியாமல் கண்கலங்க, எழுந்துவந்து அவரை ஆறுதல்படுத்திய மனோபாலா, நான் முதல் படம் பண்ணிட்டு மூணு வருஷம் கழிச்சுத்தான் எனக்கு அடுத்த படம் கிடைச்சுது. அதுல என்னை நிரூபிச்சு வெளியே வந்தவன் தான் நான். அவுட்டோர்ல இருநூறு ரூபா கொடுத்து என்னைய ரிஷப்சனிலேயே விட்டுட்டு​ப்​ போன கதையெல்லாம் இருக்கு. ஏன் அது கூட கொடுக்காம போன கதையும் நிறைய இருக்கு நம்ம வெற்றியால தான் மத்தவங்களுக்கு பதில் சொல்லணும்” என​த்​ தேற்றினார்​.

விழாவில் நடிகர்கள் பாரதிமோகன், மைம் கோபி, மனோபாலா, கவிஞர் குணா,​ ​எட்செட்ரா எண்டெர்டெயின்மென்ட் விவேக், பாடலாசிரியர் மீனாட்சி சுந்தரம், நடிகர்கள் மகா, சிவகுரு ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். விழாவினை பி ஆர் ஓ ஜான் தொகுத்து வழங்கினார்.

Read Previous

கௌதம் மேனன், தனுஷ் கூட்டணியில் இணைந்த சசிகுமார்

Read Next

Vijay Sethupathi, Trisha in ’96’ Official Teaser

Most Popular