பாரதிராஜாவால் ‘கண்களால் கைது செய்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ப்ரியா மணி.
அமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றவர்.
தமிழ் பேசத் தெரிந்த ப்ரியாமணியை, தேசிய விருது பெற்ற பின்னும் தமிழ்த் திரையுலகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
‘பருத்தி வீரன்’ படத்திற்குப் பின்னர் விஷாலுடன் ‘மலைக்கோட்டை’ பிருத்விராஜுடன் ‘நினைத்தாலே இனிக்கும்’ ஆகிய வெற்றிப் படங்களில் நடித்தார். சூர்யாவுடன் ராம் கோபால் வர்மா இயக்கிய ‘ரத்த சரித்திரம்’ படத்திலும் நடித்தார்.
தமிழில் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம் ‘சாரு லதா’. இந்த படத்தில் இரு வேடங்களில் நடித்திருந்தார்.
ஷாரூக்கானுடன் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடி, ஹிந்தித் திரையுலகிலும் நுழைந்தார்.
சில தினங்களுக்கு முன் தெலுங்கின் முன்னணி நாளிதழ் ஒன்றில் ப்ரியா மணி தமிழ்ப் படங்களில் இனி நடிக்க மாட்டார் எனவும், அவர் தெலுங்கு, கன்னடப் படங்களில் நடிக்கவே ஆர்வமாக இருக்கிறார் எனவும் செய்தி ஒன்று வெளியாகியது. அதைத் தொடர்ந்து பல தெலுங்கு மீடியாக்களில் இந்த செய்தி வெளியானது.
அதைத் தொடர்ந்து நாம் ப்ரியா மணியைத் தொடர்பு கொண்ட போது, “அந்த செய்தியில் துளியும் உண்மையில்லை. தமிழில் நல்ல கதாபாத்திரத்திற்காக காத்திருக்கிறேன்” என தெரிவித்தார்.
