இளையராஜாவிடம்தான் முதலில் கதை சொல்வேன் – இயக்குனர் மகேந்திரன்

director mahendiran and ilaiyaraja

மகேந்திரன், தமிழ் சினிமாவில் காலத்தால் அழிக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குனர்.

“உதிரிப் பூக்கள், முள்ளும் மலரும்” படத்தை இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும் எத்தனை முறையானாலும் சலிக்காமல் பார்க்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள்.

அந்த படங்கள் மட்டுமா, “நெஞ்சத்தைக் கிள்ளாதே, ஜானி, சாசனம்” ஆகிய படங்கள் இயக்குனர் மகேந்திரனின் மகத்தான படங்கள்.

ஏறக்குறைய 23 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படம் இயக்கப் போகிறார் மகேந்திரன். அந்த படத்திற்கு இசை இளையராஜா. இது பற்றிய பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

அப்போது இயக்குனர் மகேந்திரன் பேசியதாவது,

“இன்னும் இந்த படத்துக்கு டைட்டில் வைக்கலை. நான் ஒரு படம் எடுத்தால் என் இஷ்டத்துக்கு படம் எடுப்பேன். அதனாலதான் இந்த படம் எடுக்க சம்மதிச்சேன்.  நான் எப்பவும் ஒரு படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, முதல் முதலா நான் கதை சொல்றது யாருகிட்டன்னா, இளையராஜா கிட்டதான்.

அதுவும் இந்த படத்தோட கதையை இப்பதான் கொஞ்ச நேரம் முன்னாடி சொன்னேன். அப்புறம் காமிராமேன், எடிட்டர் இவங்ககிட்டதான் கதை சொல்வேன். வேறு யாருகிட்டயும் சொல்ல மாட்டேன்.

எல்லாரும் இளையராஜா மியூசிக் மட்டும்தான் போடுவாருன்னு நினைப்பீங்க. என் படத்துக்கு டயலாக்கே அவர்தான். என் படங்கள்ல பின்னணி இசைதான் டயலாக். சைலன்ட்டா இருக்கிற போர்ஷனையெல்லாம், வசனத்தால இல்லாம இசையால நிரப்புறவரு இளையராஜா.

ஒரு காட்சியோட உயிரை, அதன் சாரத்தை கொடுக்கிறது பின்னணி இசைதான். மொத்தத்துல அந்த படத்துக்கு ஜீவன் கொடுக்கிறது அதுதான்.

என் படத்தோட கதையை அவர்கிட்ட சொல்லியிருக்கேன். அவர்தான் படத்துக்கு டைட்டில் கொடுப்பாரு. ‘உதிரிப் பூக்கள்’ டைட்டில் கொடுத்ததே அவர்தான்.  பாட்டு கம்போசிங் போனப்ப ஒரு நாள் அவர் சொன்ன டைட்டில்தான் அது.

இந்த படம் குடும்பங்கள்ல நடக்கிற பிரச்சனைகளை மையமா வச்சி எடுக்கப்படற படம். புதுமைப்பித்தன் எழுதிய ஒரு சிறுகதையில சில வரிகள்ல இருந்து எடுக்கப்பட்ட ஒரு விஷயம்தான் இந்த படத்தோட கதை.  வாழ்க்கையைப் பத்தின  உன்னதமான, அற்புதமான  ஒரு விஷயத்தை மிக எளிமையா அந்த கதையில சொல்லியிருந்தாரு.

ராஜாகிட்ட அதைப் படிச்சிக் காட்டினேன். நடுத்தரக் குடும்பங்கள்ல, அதுக்கும் கீழ இருக்கிற குடும்பங்கள்ல கலாச்சார மாற்றங்களால ஏற்படுகிற பிரச்சனைகள், உறவுகள் சிதைக்கப்படற பிரச்சனை, மனிதத் தன்மையை வலியுறுத்தற படமா இருக்கும்.

இந்த படத்துல முக்கிய கதாபாத்திரங்கள்ல புதுமுகங்கள் நடிக்கிறாங்க, ஒரு சில கதாபாத்திரங்கள்ல அனுபவமுள்ளவங்கள நடிக்க வைக்கலாம்னு இருக்கிறேன்.

நாங்க எப்பவுமே ஹிட் சாங்கஸ் வேணும்னு நினைச்சி, பேசிட்டு உட்காரதில்லை. அவர் போடற டியூன் எல்லாமே ஹிட்டாகிடும். அப்படித்தான் எங்க படங்கள்ல பாடல்கள் ஹிட்டாகியிருக்கு.

எனக்குன்னு சில பிரின்சிபிள்ஸ் இருக்கு. என்னோட பிரின்சிபிள்ஸுக்கு உட்பட்டு வர்றவங்க கூடதான் படம் பண்ணப் பிடிக்கும். அதை காம்ப்ரமைஸ் பண்ணி எனக்கு சினிமா எடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, அதனாலதான் பல பேரை ரிஜக்ட் பண்ணியிருக்கேன். எனக்குன்னு ஒரு பொறுப்பு இருக்கு. அதை மீறி நான் படம் எடுக்க மாட்டேன்.

இந்த படத்தை என்னோட அடுத்த படமா நினைக்லை, என்னோட முதல் படமாத்தேன் நினைக்கிறேன்,” என்றார் இயக்குனர் மகேந்திரன்.

மீண்டும் ஒரு நல்ல படத்தைக் காண தயாராகுங்கள் ரசிகர்களே….

Read Previous

2வது ஹீரோயினாக நடித்தாலும் பரவாயில்லை – ஓபனாகப் பேசும் சஞ்சனா சிங்

Read Next

சிம்புவின் இரண்டாவது காதல் தோல்வி – காரணம் என்ன ?

Most Popular