ஒய் நாட் ஸ்டுடியோஸ், ரேடியன்ஸ் மீடியா தயாரிக்க, வசந்தபாலன் இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில், சித்தார்த், பிருத்விராஜ், நாசர், தம்பி ராமையா மற்றும் பலர் நடிக்க தயாராகி வரும் ‘காவியத் தலைவன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.
இயக்குனர் வசந்தபாலன், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், தயாரிப்பாளர் சசிகாந்த், சித்தார்த், நாசர், வேதிகா, படத் தொகுப்பாளர் பிரவீன், கலை இயக்குனர் சந்தானம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
1940களில் சுதந்திர காலத்திற்கு முன் தமிழகத்தில் இருந்த ஒரு நாடகக் குழுவைப் பற்றிய அருமையான பதிவுதான் இந்த ‘காவியத் தலைவன்’.
நிகழ்ச்சியில் இயக்குனர் வசந்தபாலன் பேசியதாவது,
“எனக்கு சினிமாவைத் தவிர வேற எதுவுமே தெரியாது. 1992-ல நான் வந்து ஒரு எடிட்டிங் உதவியாளரா இந்த சினிமாவுக்குள்ள நுழைஞ்சேன்.
என் வாழ்க்கை , கனவு எல்லாமே சினிமாதான். நல்ல படம் பண்றதுதான் ஆசை. பிளாட் வாங்கி போடறதுலாம் தெரியாது. சினிமாவைத் தன்னுடைய வாழ்க்கையா நினைச்சவங்க வாழ்ந்த மண் இது.
எல்லாருமே தங்களுடைய தொழிலை, குடும்பத்தை விட்டுட்டு சினிமா மட்டுமே தன்னுடைய சுவாசமா நினைச்சி வாழ்ந்திருக்காங்க. சினிமாங்கறது வியாபாரமில்லை, ஒரு கலை. சினிமாவுக்குள்ள வந்துட்டோம், என்னமோ பண்ணாம பெரிய மேதைகள் , மாபெரும் கலைஞர்கள் வாழ்ந்த இடத்துல நாமளும் ஏதாவது பண்ணணும்னு நினைச்சிதான் படங்களை இயக்கிட்டிருக்கேன்.
ஒரு நல்ல சினிமாவை ஒரு ஃபிரேம் கூட மிஸ் பண்ணாம செதுக்கணும்கறதுதான் ஆசை. அதுக்குப் பின்னாடி ஒரு வேட்கை, தாகம் இருக்கு.
‘வெயில்’ படத்தை சரியான ஷுட்டிங் நாட்கள்ல முடிச்சேன். ‘அங்காடித் தெரு’ படத்துக்காக ரங்கநாதன் தெருவுல, கூட்டத்துக்கு நடுவுல புது கலைஞர்களோட எடுக்கிறது சாதாரண விஷயமில்லை. அதே மாதிரி ‘அரவான்’ படத்துக்காக எல்லாருக்கும் பச்சை குத்தி, அந்த காலகட்ட தோற்றத்தை உருவாக்கி ஷுட்டிங் ஆரம்பிக்கவே 11 மணி ஆகிடும். நல்ல சினிமாவை எடுக்கிறதுக்காக நேருகிற சில தாமதங்களால எனக்கு ‘டெரரிஸ்ட்’னு ஒரு பட்டம் கிடைச்சிடுச்சி.
ஆனால், இந்த சினிமாவுல எனக்குக் கிடைச்ச அனுபவம் ரொம்பவே புதுசு. நான் இதுவரைக்கும் சந்திக்காத ஒன்று. என்னுடைய கணிப்பு சினிமா சம்பந்தமா நடிகர்கள் சம்பந்தமா, ஒவ்வொருத்தர் சம்பந்தமா வேற வேற இருந்துட்டே இருந்தது, ஆனால் அந்த மொத்த கணிப்பையும் இந்த படம் மொத்தமா மாத்தி விட்டுச்சி. அதுக்குப் பின்னாடி ஒவ்வொரு டெக்னீஷியனும் இருக்கிறாங்க.
ஒரு நாள் ராத்திரி நானும் எழுத்தாளர் ஜெயமோகனும் பேசிட்டிருந்தோம். இலக்கியம் சம்பந்தமா பேசிக்கிட்டிருக்கும் போது , ஒளவை சண்முகம் எழுதிய ‘எனது நாடக வாழ்க்கை’ என்கிற பயோகிராபி புத்தகத்தை பத்தி பேசிட்டிருந்தோம்.
நிறைய நாடகக் கலைஞர்கள் சம்பந்தமான வாழ்க்கை சம்பந்தமான, சுவாரசியமான தகவல்களை சொல்லியிருந்தாங்க. சிவாஜிகணேசன், எம்.ஆர். ராதா, கிட்டப்பா, கே.பி. சுந்தராம்பாள் அவர்கள் பத்திலாம் இருக்கு. கே.பி. சுந்தராம்பாள் நாடகத்திற்கு ஒரு டிரெயினையே விட்டிருக்காங்க. தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் வந்து திருவள்ளுவர் அளவுக்கு புகழப்பட வேண்டிய ஒரு மாமனிதர்னு சொன்னாரு.
அதெல்லாம் ஒரு பொற்காலம். மதுரையில இருந்ததுன்னு, நாடகக் கலையை பத்தி பேசிட்டிருந்தோம். அன்னைக்கு பேசினது எனக்கு அப்படியே மனசுல நின்னுடுச்சி.
மதுரையை மையமா வச்சி, நிறைய நாடகக் குழுக்கள் இருந்தது. அந்த புத்தகத்தை வாங்கி படிச்சேன். அதைப் படிச்சதும் எனக்கு நிறைய கலர் கலர் கனவுகள் வந்துச்சி.
ராஜபார்ட்டாகவும், கள்ள பார்ட்டாகவும், ஸ்திரீபார்ட்டாகவும், தன் மொத்த வாழ்க்கையைம் அடமானம் வச்சி ஒரு குருகுலமா வாழ்ந்த மனிதர்கள். நடிப்பு, பாட்டு தவிர அவர்களுக்கு வேற எதுவுமே தெரியாம ஒரு இருண்ட வாழ்க்கை வாழ்ந்தவங்க. தினம் தினம் பாட்டுதான். தினமும் காலையில 6 மணி வரைக்கும் நடிச்சி கத்தி, கூப்பாடு போட்டு விழுந்தான்னா, பார்த்துக்காங்க.
அதைப் படிக்க படிக்க ரொம்ப சுவாரசியமா இருந்தது. தமிழ்ல பெரிய அளவுல நாடகம் சம்பந்தமான படம் வரலை. நாடக நடிகர்கள் படம் பற்றி எந்த படமும் வரலை. நல்ல நடிப்பை யார் நடிச்சாலும் பார்க்கிற உலகம் இருக்கு, நானும் இருக்கிறேன். அப்படி ஒரு நடிப்பு சம்பந்தமான கதை எழுதணும்னு ஆசைப்பட்டேன்.
அப்ப நான் எழுதன கதைதான் ‘காவியத் தலைவன்’.
தொடர்ந்து இந்த கதை மனசுக்குள் தொந்தரவு பண்ணிக்கிட்டே இருந்தது. ஒரு மேஜிக்கா திரையில கொடுக்கணும்கற வேட்கை இருந்தது. எப்படியாவது இந்த படத்தை எடுத்துடணும்னு முடிவு பண்ணன்.
இந்த படம் நடக்கணும்கறதுக்காக சித்தார்த் ரொம்பவே எனர்ஜியா இருந்தாரு. ஏ.ஆர். ரகுமான் சார் இந்த படத்துக்கு இசையமைக்கணும்னு ஆசை இருந்தது. அவரோட படம் பண்ணணும்கறதையும் நல்ல சந்தர்ப்பமா சித்தார்த் உருவாக்கிக் கொடுத்தாரு.
நல்ல தயாரிப்பாளர், நல்ல இசையமைப்பாளர், நல்ல நடிகர்கள் , நல்ல டெக்னீஷியன்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு புது சினிமாவை உருவாக்கியிருக்கிறோம். இவங்கள்லாம் இல்லன்னா இந்த படம் இந்த அளவுக்கு வந்திருக்காது.
ஒரு அழகான, அருமையான பதிவுக்காக இந்த படத்தை இவ்வளவு அழகாக ஏற்படுத்திக் கொடுத்த அனைவருக்கும் நன்றி, ” என்றார்.
