காலையில படம் இருக்கு…மாலையில இல்ல…

jigarthanda audio launch

‘பீட்சா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘ஜிகர்தன்டா’ படத்தின் இசை வெளியீடு, சென்னையில் இன்று காலை நடைபெற்றது.

இயக்குனர் பாரதிராஜா, கலைப்புலி எஸ். தாணு படத்தின் இசையை வெளியிட்டார்கள். பல திரையுலகப் பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

விழாவில்   தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க கூடுதல் செயலாளர் ஸ்ரீதர் பேசியதாவது,

“இந்த கூட்டத்தைப் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஏன்னா, தியேட்டர்ல 19, 32, இவ்வளவு பேர்தான் தியேட்டருக்கு வர்றாங்க.

யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை. நிதர்சனமான உண்மை. சில நாட்களுக்கு முன்னாடி கேயார் தயாரிப்பாளர்களுக்கு 200 கோடி நஷ்டம்னு பேசியிருந்தாரு. அது உண்மை. அதை யாரும் மறுக்கவில்லை. வினியோகஸ்தர்களுக்கு ஏற்படக் கூடிய நஷ்டம், திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஏற்படக் கூடிய நஷ்டத்தையும் பார்க்கணும்.

தமிழ்நாட்டுல இருக்கிற மொத்த திரையரங்குகளோட எண்ணிக்கை 934, சென்னையில இருந்து கன்னியாகுமரி வரைக்கும். இதே நிலைமை நீடித்தால்,    இன்னும் சில மாதங்களில் 250 திரையரங்குகள் வரை மூடப்படும் நிலை ஏற்படும்.

அடிக்கடி என் கிட்ட போன் பண்ணி விசாரிப்பாங்க. தியேட்டர் நிலைமை எப்படியிருக்குன்னு. அவங்ககிட்ட பேசவே சங்கடமா இருக்கும். எப்படிப்பா படம் இருக்குன்னு கேப்பாங்க, சுமாரா இருக்குன்னு சொல்லுவேன், ஓபனிங் எப்படின்னு கேப்பாங்க, சுமாராதான் இருக்கு, எப்படி கலெக்ஷன் இருக்குன்னு கேப்பாங்க, ஒரு 40 இருக்குன்னு சொல்லுவேன். இதையெல்லாம் சொல்ல வருத்தமா இருக்கும்.

பேப்பர்ல விளம்பரம் கொடுக்கும் போது “அதிரி புதிரி வெற்றி, உலக அளவில் வெற்றி, மாஸ்” இப்படியெல்லாம் கொடுப்பாங்க. ஆனால், உண்மை அதுவல்ல.

திரையரங்குக்கு படம் பார்க்க வரவே மாட்டேங்கிறாங்க. பெரிய ஆர்ட்டிஸ்ட், சின்ன ஆர்ட்டிஸ்ட்னு பாகுபாடு இல்லை. திரையரங்குகளுக்கு ஆடியன்சை வரவைக்கணும்.

வெள்ளிக்கிழமை காலையில படம் போட்டால், மாலையிலயே அந்த படங்களை எடுக்க வேண்டி இருக்கு. அத்தி பூத்தாற் போல ஒரு சில படங்கள்லதான் அதைத் தாண்டி ஓடுது.

அதிக செலவில் எடுக்கப்பட்ட படங்கள், தயாரிப்பாளருக்கும் பெரிய பொருட்செலவு, அவரும் சிரமத்துக்கு ஆளாகிறாரு, அந்த படத்தை வாங்கற வினியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் சிரமத்துக்கு ஆளாகறாங்க.

தியேட்டர்ல வசூலானாதான் வினியோகஸ்தர்களுக்கும் பணம் வரும், தயாரிப்பாளருக்கும் பணம் வரும்.

கண்டிப்பாக நல்ல படங்கள் வரவேண்டும், அந்த படங்களும் ஓட வேண்டும்,” என்று பேசினார்.

Read Previous

வடிவேலு நடிக்கும் தெனாலிராமன் – இசை விரைவில்…

Read Next

பிரசாந்தின் ‘சாஹசம்’ ஆரம்பமானது…

Most Popular