அது என்ன ? தனுஷ் அப்பா, கஸ்தூரி ராஜான்னு சொன்னா எங்களுக்குத் தெரியாதான்னு சில பேர் கேக்கறது புரியுது.
இன்றைய இளம் தலைமுறையினருக்கு அவரைப் பத்தி நேரடியா சொல்றத விட, தனுஷ் அப்பான்னு சொன்னால் ஈஸியா தெரிஞ்சிடும் இல்லையா அதனாலதான்.
அது மட்டுமில்லாம, நாம இப்ப பார்க்கப் போற செய்தியும் இளைய தலைமுறை இயக்கிய படத்தைப் பத்தி, அதனால ஒரு ஒற்றுமையா இருக்கட்டும்னு நினைச்சோம்.
நேற்று நடைபெற்ற ‘ஜிகர்தண்டா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எண்ணற்ற இளம் தலைமுறை இயக்குனர்கள் வந்து சிறப்பித்தனர். அது மட்டுமல்ல, கடந்த தலைமுறை இயக்குனரும், தனுஷ், செல்வராகவனின் அப்பாவான கஸ்தூரி ராஜவும் வந்திருந்தார்.
மகன்களை வைத்து அப்பாவைக் குறிப்பிடுவதில் ஒரு அப்பாவுக்கு பெருமையாகத்தானே இருக்கும்.
நிகழ்ச்சியில் கஸ்தூரிராஜா பேசும் போது தயாரிப்பாளர் ஒருவர் அவரை அழவைத்ததைப் பற்றிப் பேசினார். அப்படி என்ன அதில் ஒரு சுவாரசியம்…படியுங்கள்…
“இந்த படத்தோட தயாரிப்பாளர் கதிரேசன் என்னோட நண்பர். ஒரு 17, 18 வருஷமா பழக்கம். சிஸ்டமேடிக்கான ஒரு ஆளு.
திடீர்னு ஒரு நாள் என்கிட்ட வந்தாரு, சார் படம் தயாரிக்கலாம்னு இருக்கன்னு சொன்னாரு. யார் யாருக்கு என்ன தொழில் தெரியுமோ அதை மட்டும் செஞ்சாதான் அதை சாதிக்க முடியும். நீங்க நல்லாதானே இருக்கீங்க, ஏன் கஷ்டப்படணும்னு நினைக்கிறீங்கன்னு கேட்டேன்.
என் மனசுக்குள்ள வேற ஒண்ணு ஓடிட்டிருந்தது, என் டேட் கேக்கதான் வந்தாருன்னு நான் நினைச்சிட்டிருந்தேன். ரொம்ப நேரமா பேசிட்டு, சார், தனுஷ் கால்ஷீட் வேணும்னு கேட்டாரு.
ஆனால், ரொம்ப சரியா செய்வாருன்னு நம்பி கொடுத்தோம். ‘பொல்லாதவன்’, ஒரு வித்தியாசமான படம், என் பையனை வேற ஒரு பரிமாணத்துல பார்த்தேன். அதுக்கு ஒரு நன்றி.
இரண்டாவது, ‘ஆடுகளம்’, என்னை அழ வைச்ச தயாரிப்பாளர் இவர் மட்டும்தான். வேற எதுக்காகவும் நான் அழுததே கிடையாது. இவர் என் கண்ணுல கண்ணீரை வரவைச்சாரு. அந்த படத்துக்காக 6 நேஷனல் அவார்டு வாங்கிட்டு வந்தாரு. என் பையனுக்கும் வாங்கிக் கொடுத்தாரு.
அதை கண் முன்னாடி பார்த்துட்டு தாரை தாரையா கண்ணீர் விட்டேன், அந்த கண்ணீருக்கு நன்றி…
நான் சில நாளுக்கு முன்னாடி நான் இயக்கிட்டிருக்கிற படத்தோட ஆடியோ ரிலீசுக்கு ஒரு மூணு டைரக்டரை கூப்பிடறதுக்கு ரொமப கஷ்டப்பட்டேன். இங்க பார்த்தால் அத்தனை இளைய தலைமுறை இயக்குனர்களும் வந்திருக்காங்க. இவங்களலாம் எப்படி சேர்த்தாரு, அது கதிரேசனால மட்டும்தான் முடியும்.
இந்த ‘ஜிகர்தண்டா’ படமும் பார்க்கும் போதே தெரியுது, கண்டிப்பா வித்தியாசமா தெரியுது, பெரிய வெற்றியடையணும்னு வேண்டிக்கிறேன், ” என பேசினார்.