நடிப்புக்காக உடம்பைக் குறைக்கறாங்க, சிக்ஸ் பேக், எய்ட் பேக் வைக்கறாங்க, மொட்டை அடிச்சிக்கிறாங்க, இப்படி எவ்வளவோ செய்யும் போது, நயன்தாரா ‘நகத்தை’ வெட்டி நடிச்சதுல அப்படி என்ன சுவாரசியம்….
‘கஹானி’ படத்தோட ரீமேக்கான ‘நீ எங்கே என் அன்பே’ படத்துல நாயகியா நடிச்ச நயன்தாராவோட ஈடுபாட பத்தி அந்த படத்தோட இயக்குனர் சேகர் கம்முலா சொல்றதக் கேட்டால் புரியும்…
நயன்தாராவின் திரை பயணத்தில் ‘ நீ எங்கே என் அன்பே ‘ ஒரு மைல் கல்லாக இருக்கும்.
ஒரு முக்கியமான, உணர்சிகரமான காட்சி படமாக்கி கொண்டு இருந்தோம். அப்போது தற்செயலாக அவரது கை விரல் நகங்களை கவனித்தேன். மிகவும் நேர்த்தியாக, அழகாக, நீளமாக இருந்தது .
ஆனால் கதாபாத்திரத்தின் படி , அந்த காட்சியில் அவரது நகங்கள் அவ்வளவு அழகாக இருக்க வாய்ப்பில்லை என்பதால், இந்த குறையை நயன்தாராவிடம் குறிப்பிட்டேன். அவருக்கே உரிய ஒரு புன்னகையோடு பின்னோக்கி நகர்ந்தார்.நானும் அடுத்த காட்சிக்கான கவனத்தில் இருந்தேன்.
சில வினாடிகளில் அவர் திரும்பிய போது பார்த்தால் அவரது நகங்கள் வெட்டப்பட்டு இருந்தது. இந்த செயல் அவர் மேல் இருந்த மரியாதையை அதிகப் படுத்தியது. ஏனன்றால் அந்த தருணத்துக்கு முன்னரே நான் அந்த காட்சியில் அவரது நகத்தை மறைத்து படம் பிடிக்க தயாராக இருந்தேன்.
இன்னொரு சம்பவத்தைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். படத்தில் வரும் ஒரு சண்டை காட்சிக்காக அவருக்குப் பதிலாக ’டூப்’ உபயோகிக்கலாம் என இருந்தேன் . ஏனென்றால் அது சற்று அபாயகரமான காட்சி. இருந்தாலும், இதை நான் தான் செய்வேன் என்று அழுத்தமாக , ஆணித்தரமாக சொல்லி விட்டு நடித்தார்.
அவரது அந்த கடின உழைப்பின் பலன் , அந்த காட்சி படமாக்க பட்ட ஒவ்வொரு பிரேமிலும் தெரிந்தது.
தொழில் நேர்த்திக்கும் தொழில் பக்திக்கும் நயன்தாரா ஒரு முன்னுதாரணம் . தொழில் ரீதியாக பல்வேறு போட்டிகளை சந்தித்தாலும் அவர் முன்னிலையில் இருப்பதற்கு அவரது இந்த தொழில் பக்திதான் காரணம்,” என பாராட்டித் தள்ளுகிறார் இயக்குனர் சேகர் கம்முலா.