‘கிரீடம், பொய் சொல்லப் போறோம், மதராசப்பட்டிணம், தெய்வத் திருமகள், தாண்டவம், தலைவா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் இயக்கி வரும் படம் ‘சைவம்’.
‘தெய்வத் திருமகள்’ சாரா, நாசர், கௌசல்யா, பாஷா (நாசரின் மகன்) மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
விஜய் இயக்கும் படங்கள் ஒவ்வொன்றிலும் குடும்பப் பின்னணி, அழகாக அமையும். இந்த படம் முற்றிலும் அப்படிப்பட்ட ஒரு படம்தான்.
படத்தைப் பற்றி இயக்குனர் விஜய் கூறியதாவது,
““முழுக்க முழுக்க குடும்ப கலாச்சாரத்தை முன்னிறுத்தும் படமாகும் . நமது குடும்ப வேர்களை பற்றிய கதை இது. நமது முன்னோர்களின் படங்கள் நம் வீட்டில் தொங்குவதன் உண்மையான அர்த்தத்தை புரிய வைக்கும் கதை.
நாசர் சார் தன்னுடைய வாழ் நாள் சாதனையாக இந்த படத்தை எடுத்துக் கொள்ளலாம் . அந்த குட்டி தேவதை சாரா , ‘தெய்வத் திருமகள்’ படத்தில் இருந்ததை விட பல மடங்கு உயரத்தை நடிப்பால் இந்த படத்தில் தொட்டிருக்கிறார்.
பாஷா என்கிற பெயரில் அறிமுகமாகும் நாசர்- கமீலா நாசர் தம்பதியரின் மகன் இந்த படத்தில் ரகளை படுத்தி இருக்கிறார் . அவருடைய உற்சாகம் திரையிலும் தெறிக்கும் என்று நம்புகிறேன் .
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஆகியோர் என்னுள் இணைந்த , என்னுடைய மன ஓட்டத்தை அறிந்தவர்கள் என்பதால் அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றுகிறேன் .
ஒரு படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே அடுத்த படத்தை பற்றி நாங்கள் விவாதிக்கத் தொடங்குவோம்.அதுவே நாங்கள் தொடர்ந்து பணியாற்றும் ரகசியம் .
‘ சைவம் ‘ இந்த கோடை காலத்தில் குளிர்ச்சி ஊட்டும் ஒரு இனிய தென்றலாக வலம் வரும் .இந்த தலைப்பு எந்த ஒரு கலாச்சாரத்தை பற்றியதோ , வழக்கத்தை பற்றியதோ அல்ல …. கதையின் மைய கருத்தை பற்றியது,” என்கிறார் விஜய் .