முறையற்று நடந்த ‘மான் கராத்தே’ இசை விழா

maan-karatae-audio-function-newsபோதையிலேயே மிகவும் மோசமான போதை ‘புகழ்’ போதை. மற்ற எந்த போதையிலிருந்து கூட எளிதில் மீண்டு விடலாம். ஆனால், புகழ் போதையில் சிக்கியவர்கள் வெளிவருவது சிக்கல்தான்.

அப்படி ஒரு போதையில் சிக்கிக் கொள்ள வைத்திருக்கிறார்கள் சிவகார்த்திகேயனை. அவரும் அதற்கேற்றபடி நடந்து கொள்வதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

இன்று காலை சென்னை, சத்யம் திரையரங்கில் நடைபெற்ற ‘மான் கராத்தே’ படத்தின் இசை விழாதான் அதற்கு சாட்சி.

சுமார் 500 பேர் அமரும் அரங்கத்திற்குள் 1000க்கும் மேற்பட்டோர் நுழைந்துவிட்டனர். பத்திரிகையாளர்கள் அமர்வதற்குக் கூட இடம் இல்லாமல் அலைக்கழிக்கப்பட்டனர்.

ரசிகர்கள் ஒரு விழாவுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை. ஆனால், இப்படி ஒரு கூட்டத்தை கூட்டியதன் காரணம்தான் புரியவில்லை. அழைப்பே இல்லாமல் வந்தவர்கள் அதிகமா, அல்லது  500 பேர் அமரும் அரங்கிற்குள் 1000க்கும் மேற்பட்டவர்களை தெரிந்தே அனுமதித்தார்களா. ஏதாவது, விபத்து நேர்ந்திருந்தால் அதற்கு யார் பொறுப்பேர்ப்பார்கள் ?

இதே அரங்கில் சென்ற வாரம் ரஜினிகாந்த், ஷாரூக்கான், தீபிகா படுகோனே, ஏ.ஆர். ரகுமான் போன்றவர்கள் கலந்து கொண்ட ‘கோச்சடையான்’ படத்தின் இசை விழா மிகவும் ‘ஆர்கனைஸ்டாக’ நடைபெற்றது. முறையான விதத்தில் அனைத்தையும் செய்திருந்தார்கள்.

ஆனால், இன்று நடந்த ‘மான் கராத்தே’ இசை விழாவில் எந்த விதமான அடிப்படை முறை கூட பின்பற்றப்படவில்லை. ‘பவுன்சர்கள்’ என்று அழைக்கப்படும் அடியாட்கள், குண்டர்கள் தோற்றத்தில் உள்ளவர்களே நிறைந்திருந்தனர். யார் உள்ளே நுழைந்தாலும் அவர்களை தடுப்பதிலும், மிரட்டி வெளியே அனுப்புவதையுமே செய்தார்கள்.

இதனால், கோபமுற்ற பல பத்திரிகையாளர்கள் அரங்கிற்குள் நுழையாமல் வெளியிலியே இருந்து விட்டனர். இதனால் இசை விழாவில் என்ன நடக்கிறது என்ற செய்தியைக் கூட சேகரிக்க முடியவில்லை என அவர்கள் வருத்தப்பட்டனர்.

தொலைக்காட்சி சேனல்களைச் சேர்ந்தவர்களுக்கும் இதே நிலைமைதான். உள்ளே சென்று காமிராவை வைக்க இடம் பிடித்தாலும் அவர்களால் நிகழ்ச்சிகளை படம் பிடிக்க முடியாத அளவிற்கு காமிராவின் முன்னால் குண்டர்களும், ரசிகர்களும் சூழ்ந்து கொண்டு அவர்களை வேலை செய்ய விடாமல் தொந்தரவு செய்துள்ளனர்.

இதை விட கொடுமை, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் டி.சிவா-வை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்திவிட்டனர். கோபத்துடன் வெளியேறிய அவரை சமாதனம் செய்து கொண்டிருந்தனர் சிலர். மற்றும் முன்னணி திரைப்பட மக்கள் தொடர்பாளர் ‘மௌனம்’ ரவியையும் தடுத்து நிறுத்தினர்.

ரஜினிகாந்த், கமல்ஹசான், விஜய், சூர்யா உள்ளிட்ட எத்தனையோ நட்சத்திரங்கள் சத்யம் திரையரங்கில் நடந்த விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், எந்த வித சலசலப்புமின்றி விழாக்கள் அமைதியாக நடைபெறும்.

அவற்றையெல்லாம் பார்த்த நமக்கு இன்று நடந்த விழாவை எதற்காக, யாரை திருப்திப்படுத்த செய்திருந்தார்கள் என்றே யோசிக்க வைக்கிறது.

ஹிந்தியிலும் வெற்றி பெற்ற ஏ.ஆர். முருகதாஸ், அங்கு உள்ள ‘பவுன்சர்கள்’ கலாச்சாரத்தை இங்கும் கொண்டு வரலாம் என முயற்சிக்கிறாரா, அல்லது ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் , மான் கராத்தே,” படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் கால்ஷீட்டைப் பெறலாம் என தயாரிப்பு நிறுவனம் செய்ததா எனத் தெரியவில்லை.

தமிழ் சினிமாவில் எத்தனையோ பேர் வருகிறார்கள், போகிறார்கள், ஆனால், ஒரு சிலர் மட்டுமே நிலையான இடத்தை மக்கள் மனதில் பிடிக்கிறார்கள்.

அதற்குக் காரணம் அவர்களது எளிமையும், கள்ளம் கபடமற்ற உள்ளமும், நேர்மையான செய்கையும்தான் என்பது நிதர்சனமான உண்மை.

நம்மில் ஒருவராக சிவகார்த்திகேயன் இருக்கிறார் என்று வீட்டுக்கு வீடு டிவியில் அவரைப் பார்த்து ரசிகர்கள் ரசித்ததால்தான் இன்று இந்த நிலையை அடைந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

தட்டிக் கொடுப்பவர்களும், தூக்கி விடுபவர்களும் மட்டும் இருந்தால் போதாது, ‘கை’ கொடுக்க பத்திரிகையாளர்களும் வேண்டும் என்பதை உணரும் காலம் வரும்.

Read Previous

இணையங்களில் வெளியான ‘மான் கராத்தே’ ஆடியோ…

Read Next

நான் ஹீரோவா, ஆர்ட்டிஸ்டா, ஸ்டாரான்னு தெரியாது ? – சிவகார்த்திகேயன்

Most Popular