‘மதுர சம்பவம், தொப்பி, சிவப்பு எனக்கு பிடிக்கும்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து யுரேகா இயக்கியிருக்கும் படம் ‘காட்டுப்பய சார் இந்த காளி’.
2009ம் ஆண்டு வெளிவந்த ‘மத்திய சென்னை’ படத்தில் நாயகனாக நடித்த ஜெய்வந்த் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க, நாயகியாக ஐரா நடிக்க, மூணார் ரமேஷ், ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய இயக்குனர் யுரேகா, தமிழ்நாட்டிற்கு வேலை செய்ய வரும் வட இந்தியர்களால் வரும் பிரச்சினைகளை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம் என்றார்.
“தமிழ்நாட்டில் வரவர தமிழில் கூட பேச முடிவதில்லை. திராவிட மொழி என்றால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு ஆகியவைதான் திராவிட மொழிகள்.
சமீப காலமாக வட மாநிலங்களிலிருந்து பலர் தமிழகத்திற்கு வாழ வருகிறார்கள். அவர்கள் வாழ வரட்டும், ஆனால் ஆள வேண்டும் என நினைக்கக் கூடாது.
ஹோட்டலுக்கு சென்றால், டோல்கேட் சென்றால் அங்கு ஹிந்தி பேசுபவன்தான் இருக்கிறார். அவர்கள் தமிழில் பேச முற்படுவதில்லை. ஹிந்திதான் பேசுகிறார்கள். தமிழ்நாட்டிலேயே தமிழ் பேச முடியாத நிலைக்கு தற்போது தள்ளப்பட்டு வருகிறோம். என் ஊரில் நானே தமிழ் பேச முடியவில்லை.
மற்ற மாநிலத்தவர்கள் இங்கே வாழழுவதற்கு உரிமை இருக்கிறது, ஆனால் ஆளுவதற்கு உரிமை இல்லை.
வட மாநிலப் பொருளாதாரக் கொள்கை தமிழ்நாட்டிற்குள் வந்துவிட்டது. அதைத்தான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறோம். பிழைக்க வந்த கூட்டம், இங்கே நம்மை அழிக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது.
தமிழ் உணர்வுடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறோம்,” என்கிறார் யுரேகா.