தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரிது வர்மா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’.
இந்தப் படத்திற்கு மசாலா காபி இசைக் குழு இசையமைக்க உள்ளது.
இது பற்றி படத்தின் இயக்குனர் தேசிங் கூறியதாவது,
“இந்தப் படத்தின் இசை புதுமையாக இருக்க வேண்டும், அதுவே இந்தக் காதல் கதைக்கு பல வண்ணங்களை சேர்க்கும் என நினைத்தோம்.
அழகாக இருக்கும் துல்கர் மற்றும் நேர்த்தியான ரிது வர்மா நடிப்பதால் இசை மூலம் இந்தக் காதல் கதையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டும். அதை இந்த இளைஞர் குழு மிகச்சரியாக செய்யும் என நாங்கள் நினைத்தோம்.
ஏற்கனவே இவர்கள் ‘உறியடி’ படத்திற்கு இசையமைத்திருந்தாலும், அந்தப் படங்களின் பாடல்கள் இவர்களின் முந்தைய ஆல்பங்களில் இருந்து உருவாக்கப்பட்டவையாக இருந்தன.
ஆனால், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் பாடல்கள் புதியதாக இருக்கும். படத்தில் வெவ்வேறு வகையான நான்கு பாடல்கள் உள்ளன. அவை மிகச் சிறந்த அனுபவத்தைத் தரும்,” என்கிறார் இயக்குனர்.
இப்படத்தை ஆன்டோ ஜோசப் பிலிம்ஸ் சார்பில் ஆன்டோ ஜோசப் தயாரிக்கிறார்.