‘தேவா’ன்னா ‘கானா’ன்னு முடிவு பண்ணிட்டாங்க – இசையமைப்பாளர் தேவா

Dummy Tappasu Audio Launch_0001190களில் முன்னணி இசையமைப்பாளராக இருந்த இசையமைப்பாளர் தேவா, கடந்த சில வருடங்களாக அதிக படங்களுக்கு இசையமைக்கவில்லை.

“வைகாசி பொறந்தாச்சு, சூரியன், ஆசை, அண்ணாமலை, பாட்ஷா, நேருக்கு நேர், வாலி, குஷி, முகவரி, அவ்வை சண்முகி, காதல் கோட்டை, அருணாச்சலம், காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம், கண்ணெதிரே தோன்றினால், நினைத்தேன் வந்தாய், தேவதையைக் கண்டேன்…” என இவரது ஹிட் பாடல்கள், படங்களின் பட்டியல் குறிப்பிடும்படியாகவே இருக்கும்.

இருந்தாலும் மற்ற மெலோடி, டூயட் பாடல்களை விட தேவா என்றாலே கானா பாடல்கள்தான் என்று சொல்லுமளவிற்கு அவருடைய பெயர் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டது.

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது பரபரப்பாக தயாராகிக் கொண்டிருக்கும் ‘டம்மி டப்பாசு’ படத்திற்காக நம்மைச் சந்தித்தவர் அந்த படத்தைப் பற்றியும், இசையையைப் பற்றியும் மிகவும் உற்சாகமாய் பேசினார்.

படத்தின் பாடல்களும் வெரைட்டியாக ரசிக்க வைக்கும் விதத்தில் அமைந்துள்ளன. சென்னை சம்பந்தப்பட்ட கதை என்பதால் அவருக்கேயுரிய கானா பாடலும், மற்ற விதமான பாடல்களும் படத்தில் தாளம் போட வைக்கின்றன.

அதே சமயம் அவருடைய கவலை ஒன்றையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

“பல மேடைகள்ல நான் பாடியிருக்கேன். நல்ல மெலடி பாடல்களைப் பாடினால் ரசிகர்கள் கத்தறாங்க. ஆனால், கானா பாட்டு பாடினால் கைதட்டி ரசிக்கிறாங்க.

கானாவுக்கும், மெலடி பாட்டுக்கும் என்ன வித்தியாசம்னா. ஒரு ஆடிட்டோரியத்துல கானா பாட்டை ரசிக்கிறவங்க பின்னாடி இருப்பாங்க. தியேட்டர்ல முன்னாடி இருப்பாங்க.

நான் ஆரம்ப காலத்துல இசையமைச்சப்பலாம் கானா ஸ்டைல் பாடல்களே இருக்காது. எஸ்.ஏ. சந்திரசேகரன் சார் இயக்கத்துல ‘ஆடாதடா…ஆடாதடா…மனிதா’ன்னு ஆரம்பிச்சேன்.  ஆனால், அப்புறமா என்னை ‘கானா’ ன்னுதான் முத்திரை குத்தினாங்க. மெலடி பாடல்களையே மறந்துட்டாங்க.

இதை விட ஒரு கொடுமை. மலேசியாவுல கச்சேரி பண்ண போயிருந்தேன். அதுக்கு ஒரு பிரஸ்மீட் நடத்தினாங்க. ‘எங்கெங்கே….எங்கெங்கே…’ன்னு பாடிக் காமிச்சேன். நல்ல பாட்டு சார் இது, யாரு மியூசிக்னு என் கிட்டயே கேக்கறாங்க.

அப்புறம் இன்னொரு விஐபி, தேவா சார் மெலடி பாட்டுலாம் போட மாட்டாரே, அவருக்கு குத்து பாட்டுதான் தெரியும்னு சொல்லியிருக்காரு. இப்படி ஆயிடுச்சிங்க நம்ம நிலைமை.

இன்னொரு கொடுமை, ஒரு சேனல்ல என்னோட ‘கொஞ்ச நாள் பொறு தலைவா….’பாட்டு போயிக்கிட்டிருந்தது, அப்படியே படுத்துக்கிட்டே பார்த்துட்டிருக்கேன். இசையமைப்பாளர் -னு என் பேர் போகாம, வேற யார் பேரோ போகுது. அந்த பாட்டையெல்லாம் நான் இல்லைன்னே நினைச்சிக்கிறாங்க, என்னங்க சொல்றது, ” என வருத்தப்படுகிறார்.

பேட்டியை முடித்த கையோடு வீட்டுக்கு வந்து ‘டம்மி டப்பாசு’ பாடல்களைக் கேட்டால் திரும்பத் திரும்ப கேட்க வைக்கும் ‘மேஜிக்’கை செய்திருக்கிறார்.

‘டம்மி டப்பாசு’ வில் மீண்டும் பட்டாசாக பட்டைய கிளப்ப வருகிறார் இசையமைப்பாளர் தேவா…

 

Read Previous

இன்றைய ரிலீஸ் – 2 படங்கள்…

Read Next

100வது நாளில் ‘கோலி சோடா’…

Most Popular