‘அணை’ பிரச்சனை தான் ரஜினியின் ‘லிங்கா’ கதையா ?

lingaa poojai‘கோச்சடையான்’ படத்தின் வெளியீடு தள்ளிப் போன சூழ்நிலையில் மீடியாக்களின் பார்வை வழக்கம் போல ரஜினிகாந்த் மீதே விழுந்துள்ளது.

ரஜினிகாந்தின் ‘ட்விட்டர்’ வரவு, யு டியூப் தளம் மூலம் ‘கோச்சடையான்’ படத்திற்கான வீடியோ பேட்டி என கடந்த சில நாட்களாகவே அனைத்து ஊடகங்களிலும் ரஜினி செய்தியே பெரிதாகப் பேசப்பட்டது.

இன்று வெளிவந்த ஒரு வார இதழில் ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் கதை பற்றிய செய்தி ஒன்றும் வெளியாகியுள்ளது.

இன்னும் சில நாட்களுக்கு ‘கோச்சடையான்’ பற்றிய பரபரப்பு மாறி ‘லிங்கா’ பற்றிய செய்தியே பற்றிக் கொள்ளும்.

‘லிங்கா’ படத்தின் கதை என்ன என்பதைப் பற்றி நாமும் கோடம்பாக்க வட்டாரத்தில் விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்தன.

‘லிங்கா’ படத்தின் கதை முல்லைப் பெரியாறு அணை பற்றிய ஒரு படமாம்.

தமிழகத்தின் தென் மாவட்ட மக்களுக்கு வாழ்வாதரமாக விளங்கி வரும் ‘முல்லைப் பெரியாறு அணை’யைக் கட்டிய ‘பென்னி குயிக்’ கதாபாத்திரத்தை மையமாக வைத்துத்தான் கற்பனைக் கலந்து சினிமாவுக்கேற்ற விதத்தில் முழுக் கதையும் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

படத்தில் ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடிக்கப் போகிறார் என்ற தகவலும் ஏற்கெனவே வெளியாகியுள்ளது.

ஒரு ரஜினிகாந்த் மக்களுக்காக அணை கட்டிய கதாபாத்திரத்திலும், மற்றொரு ரஜினிகாந்த் அவரின் வாரிசாக வேறொரு கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்களாம்.

முதல் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹாவும், அடுத்த ரஜினிக்கு அனுஷ்காவும் ஜோடியாக நடிக்கிறார்கள்.

சமீபத்தில் மைசூரில் படமாக்கப்பட்ட ஒரு காட்சியைப் பற்றிக் கூட பத்திரிகைகளில் செய்தி வெளிவந்தது, அதுவும் இந்த கதைக்குப் பொருத்தமான காட்சியாகவே இருக்கிறது.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை நேற்றுதான் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

இப்போது ‘லிங்கா’ படத்திலும் அதுதான் மையக் கதை என்றால் சினிமாவையும், நிஜ வாழ்வையும் எப்போதுமே ஒப்பிட்டுப் பார்க்கும் தமிழ் மக்களிடையே  ஒரு சலசலப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்.

‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலம், மைசூரில் ஆர்ப்பாட்டம் நடத்துவதன் பின்னணியில் காவிரிப் பிரச்சனை கலந்திருக்கிறது.

தமிழ்நாட்டுக்கு ஏற்கெனவே அண்டை மாநிலங்களுடன் தண்ணீர்ப் பிரச்சனை இருந்து வரும் நிலையில் ‘லிங்கா’ படம் எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

படக்குழுவினரே கதையைப் பற்றி கொஞ்சமாவது சொல்லி விட்டால் நன்றாக இருக்கும்….செய்வார்களா …. ?

 

Read Previous

மே 10-ல் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ ரிலீஸ்…

Read Next

தமிழில் காணாமல் போன அஞ்சலி, கன்னடத்தில் நடிக்கிறார்…

Most Popular