நடிகை அஞ்சலி, தமிழ்த் திரையுலகை விட்டு திடீரென காணாமல் போன விஷயம் சினிமா பார்க்கும் ஒவ்வொரு ரசிகருக்கும் கண்டிப்பாக தெரிந்திருக்கும்.
அஞ்சலி நாயகியாக நடித்து கடைசியாக வெளிவந்த படம் ‘சேட்டை’. அதற்குப் பின் ‘சிங்கம் 2’ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடினார். அவர் நடித்த ‘மத கஜ ராஜா’ படம் இன்னும் வெளிவராமலே முடங்கிக் கிடக்கிறது.
இதனிடையே அஞ்சலிக்கு நெருக்கமான இயக்குனராகக் கருதப்பட்ட இயக்குனர் களஞ்சியத்திற்கும், அஞ்சலிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அஞ்சலி, ஹைதராபாத்திற்கு சென்று எங்கேயோ மறைந்து வாழ்கிறார். களஞ்சியம் இயக்கும் ஒரு படத்தில் நாயகியாக நடித்து வந்த அஞ்சலி, அதன் பின் அந்த படத்தை அம்போ என்று விட்டு விட்டார். இதனால், களஞ்சியம் கடும் கோபமடைந்தார்.
களஞ்சியம், அஞ்சலியை கோர்ட்டுக்கு இழுப்பேன், என்றும் அவர் எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்க விடாமல் தடுப்பேன் என்றும் நேற்று கூறியிருந்தார். அது பற்றிய செய்தி வெளிவந்த ஒரு மணி நேரத்திற்குள்ளேயே அஞ்சலி அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு செய்தியை பத்திரிகைகளுக்கு அனுப்பினார்.
அதில், “நான் அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுபட்டு விட்டேன். அதோடு, சமீபத்தில்தான் நான் நடிக்கும் தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பையும் எந்த பிரச்சனையும் இல்லாமல் முடித்துக் கொடுத்தேன். இப்போது புனித் ராஜ்குமாருடன் ஒரு கன்னடப் படத்திலும் நடித்து வருகிறேன்.
என்னுடைய படத்தின் படப்பிடிப்பை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. நான் இதுவரைக்கும் யாருக்கும் எந்த இடைஞ்சலும் கொடுத்தது கிடையாது, அதனால்தான் அனைவருக்கும் எனக்கு ஆதரவாக இருக்கின்றனர்.
என்னை வைத்து யார் படமெடுக்க விரும்புகிறார்களோ, அவர்கள் கவலைப்படத் தேவையில்லை. முன்பிருந்த மாதிரியும், இப்போதும் என்னுடைய கதாபாத்திரத்திற்கேற்ப நடித்துக் கொடுப்பேன், ” என்று கூறியிருக்கிறார்.
அஞ்சலி, விரைவில் கார்த்தி ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். அவர்களது ஆதரவில்தான் அஞ்சலி இப்படி ஒரு அறிக்கையை கொடுத்திருக்கிறார் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.