என் யதார்த்த கதைகளுக்கு புதுமுகங்கள்தான் சரி… – ‘கயல்’ பிரபு சாலமன்

Kayal - Gallery_00007“மைனா, கும்கி” படங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் யதார்த்த இயக்குனர்களில் ஒருவராகிவிட்டவர் பிரபு சாலமன். தற்போது புதுமுகங்களை வைத்து ‘கயல்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். படத்திற்கான இறுதிக் கட்டப் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன். அந்த இரண்டு படங்களிலும் புதுமுகங்களை நாயகனாக அறிமுகப்படுத்தியவர் இந்தப் படத்திலும் அதைத் தொடர்கிறார்.

முந்தைய படங்களைப் போலவே இந்தப் படத்தையும் அதிக மெனக்கெடலுடன் இழைத்து வருகிறார் பிரபு சாலமன். ‘கயல்’ படத்தின் டப்பிங் பணியில் இருந்தவரை சந்தித்துப் பேசினோம்…படத்தைப் பற்றி மனம் திறந்தார்…

“தமிழ்நாட்டையே சுருட்டிப் போட்ட சுனாமி, பாதிப்புகள் ஏற்படுத்தி பத்தாண்டுகள் ஆகிவிட்டது. டிசம்பர் 26 அன்று உலகம் ஒரு சோகத்தை சந்தித்தது. டிசம்பர் 25 கிறிஸ்மஸ் கொண்டாடிய சந்தோஷம் நிலைக்காமல் சோகத்தை அள்ளித் தந்தது. அதிலும் கடலோர மாவட்டங்கள் அதிகம் பாதித்தது. அதைத்தான் இந்தப் படத்தில் பதிவு செய்திருக்கிறோம். எவ்வளவு பேர் சொத்து, உறவுகள், உடமைகளை இழந்தார்கள், அதில் தொலைந்து போன ஒரு காதல் தான் ‘கயல்’.

என்னுடைய ஆரம்பகாலப் படங்களில் அர்ஜுன், விக்ரம், சிபி ராஜ், கரண் போன்ற நட்சத்திரங்கள் இருந்தார்கள். “மைனா, கும்கி, கயல்” போன்ற என் யதார்த்த கதைகளுக்கு நட்சத்திர நடிகர்கள் சரியாக இருக்க மாட்டார்கள். என் கூடவே பயணமாகிற மாதிரியான நடிகர்கள் ‘மைனாவுக்கும், கும்கிக்கும்’ தேவைப்பட்டது. லொகேசன் கொடுத்த இயற்கை மாற்றதிற்கேற்ப ‘மைனா’ படத்தை எடுத்தோம். அதனால் புதுமுகம் தான் சரி.

யானையின் மூடுக்கேற்ப படமாக்கப் பட வேண்டியதால் ‘கும்கிக்கும்’ புதுமுகம் தேவைப்பட்டது. ‘கயல்’ படத்திற்காக பிரம்மாண்ட நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு அதில் காலை 7 மணிக்கு இறங்கினால் மாலை வரை அதில் இருக்க கூடிய புதுமுகம் தேவை என்பதால் கயலிலும் புது முகம் தான்.

அடிதடி என்பது மட்டும் வாழ்வியல் அல்ல. நம்மைக் கடந்து போகிறவர்களிடம் ஒரு கதை இருக்கு. நாம் கடந்து வந்த வாழ்கையிலும் ஒரு கதை இருக்கு. அதைப் பதிவு செய்வதில் கூட ஒரு விதத்தில் கமர்ஷியல் இருக்கிறது. எதை பதிவு செய்தாலும் அது ரசிகனுக்கு புதிதாக இருக்க வேண்டும், இல்லையென்றால் நாம் தூக்கி எறியப் படுவோம்.

நம் வீட்டிற்குள் 340 சேனல்கள் வருகிறது. பெண்கள் சமயலறையிலிருந்து வந்து அதன் முன் உட்கார்ந்து விடுகிறார்கள். இன்னொரு சாரார் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து விடுகிறார்கள். அந்த சின்ன சைஸ் பெட்டிக்குள் உலகம் நம் முன்னே வந்து விடுகிறது. அவர்களை அங்கிருந்து எழுப்பி தியேட்டருக்கு வர வைக்க வேண்டி உள்ளது.

இந்த ‘கயல்’ படத்தின் கதை முழு காமெடியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனிதனின் வாழ்க்கை தான் சுகமானதாக அமையும் என்கிற மையக் கருதான் காமெடியுடன் சொல்லப்படுகிறது. கடைசி அரைமணி நேரம் யாருமே எதிர் பார்க்காத திருப்பம் இருக்கும்,” என்கிறார் பிரபுசாலமன்.

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் பி.மதன் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். புதுமுகங்கள் சந்திரன், ஆனந்தி, இமான் அண்ணாச்சி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

விரைவில் ‘கயல்’ படத்தின் இசை வெளியீடும், அதைத் தொடர்ந்து பட வெளியீடும் நடைபெற உள்ளது.

Read Previous

‘விஐபி’யை பாராட்டிய விஐபி இயக்குனர்…

Read Next

நாளை முதல் ‘சரபம்’…

Most Popular