தனுஷ், அமலா பால் மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள ‘வேலையில்லா பட்டதாரி’ இரண்டு வாரங்களைத் தொட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தொடர்ச்சியாக சில தோல்விப் படங்களால் தவித்து வந்த தனுஷுக்கு ‘வேலையில்லா பட்டதாரி’ மீண்டும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இந்த படத்தை பிரபல இயக்குனர் ஷங்கர் பாராட்டி அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்திலும் கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
“நேற்று ‘வேலையில்லா பட்டதாரி’ படம் பார்த்தேன், ஒரு யதார்த்தமான திரைப்படம்…ஒவ்வொரு காட்சியையும் ரசித்தேன். தனுஷின் ‘நச்’ நடிப்பு, அனிருத்தின் ‘நறுக்’ இசை…வெல்டன் வேல்ராஜ்…நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரசிகர்களுக்கு முழு திருப்தியான ஒரு கமர்ஷியல் படம். மொத்தக் குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்,” என இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதிலுமே ‘வேலையில்லா பட்டதாரி’ படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறதாம். இதுவரை சுமார் 20 கோடி வரை இந்தப் படம் வசூல் செய்திருக்கலாம் என கோடம்பாக்கத்தினர் தெரிவிக்கிறார்கள்.