“வாயை மூடி பேசவும், காவியத் தலைவன்” போன்ற படங்களை வருண் மணியனின் ரேடியன்ஸ் மீடியா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த சசிகாந்தின் ‘Y நாட் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தற்போது பிரபல தயாரிப்பாளர் சீ.வீ.குமாரின் திருக்குமரன் எண்டர்டேயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் படம் ‘இறுதிச் சுற்று’.
முதல் முறையாக இரண்டு பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் முதல் படம் இதுவே. மாதவன், நாசர், ரித்திகா, மும்தாஜ் மற்றும் பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கவுள்ள இப்படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் தயாராகிறது.
சுதா கொங்காரா இப்படத்தை இயக்குகிறார். பிரபல இயக்குனர் மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் ஸ்ரீகாந்த், விஷ்ணு நடித்து வெளியான ‘துரோகி’ படத்தை இயக்கியவர்.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சிவா ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல். படத்தொகுப்பு செய்கிறார். கலை இயக்கத்தை சந்தானம் கவனிக்கிறார்.
‘இறுதிச் சுற்று’ படப்பிடிப்பு ஆரம்பமாகி நடந்து வருகிறது.