பிரவீண் காந்தி என்ற இயக்குனர் இயக்கிய ‘புலிப் பார்வை’ படத்தின் இசை வெளியீடு இன்று காலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
படத்தின் இசையை மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பெற்றுக் கொண்டார்.
இசை வெளியீட்டுக்கு முன்பாக சீமான், அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். அதன் பின் இந்திய ஜனநாயக கட்சி தலைவரும் படத்தை முன்னின்று தயாரித்துள்ளவருமான பாரி வேந்தர் பேசிய போது, திரையரங்கினுள் அமர்ந்திருந்த மாணவர் அமைப்பினர் படத்திற்கு எதிராகவும், சீமானிற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
அதைத் தொடர்ந்து அங்கு ஒரு பரபரப்பு ஏற்பட்டது. உடனே சுதாரித்துக் கொண்ட காவல் துறையினர் மாணவர்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி கைது செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தைப் பார்த்த நாம் தமிழர் கட்சி, மற்றும் இந்திய ஜனநாயக கட்சியின் தொண்டர்கள் ஒரு சிலர் காவல் துறையின் பாதுகாப்பையும் மீறி மாணவர்களை கடுமையாகத் தாக்கினர்.
இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களும், புகைப்படக் கலைஞர்களும் கோஷம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களைப் படம் பிடித்தனர். மாணவர்கள் வெளியேற்றப்பட்டத்தைத் தொடர்ந்து விழா சிறிது நேரம் மட்டுமே நடைபெற்று முடிவுக்கு வந்தது.
மாணவர்கள் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்தும், அவர்கள் கைது செய்யப்பட்டது குறித்தும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து ‘புலிப் பார்வை’ படத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற மாணவர்களின் போராட்டம் மேலும் வலுப்பெற்றுள்ளது.
மாணவர்கள் தாக்கப்பட்ட வீடியோ…