எஸ்.பி.பி. சரண் தயாரிப்பில் கார்த்திக் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையைமப்பில் தினேஷ், ஐஸ்வர்யா ஜோடியாக நடிக்கும் ‘திருடன் போலீஸ்’ படத்தின் இசை சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
நா.முத்துக்குமார் எழுதி, ஹரிஹரசுதன் – பூஜா பாடிய ‘பேசாதே பார்வைகள் வீசாதே…’ பாடல் ஒரு மெல்லிய தென்றலாய் வீச, நரேஷ் ஐயர் -ரோஷினி பாட மறைந்த கவிஞர் வாலி எழுடிதிய ‘மூடு பனிக்குள்…’ பாடல் கேட்பவர்களை மெய் மறக்கச் செய்து வருகிறது.
படத்தின் இசை பற்றி இயக்குனர் கார்த்திக் கூறுகையில்,
பாடலின் வரிகளுக்கும் இனிமைக்கும் சற்றும் குறைவில்லாத காட்சி அமைப்பை நாங்கள் வழங்கி உள்ளோம். இசையின் வெற்றி படத்தின் வெற்றிக்கு கட்டியம் கூறும். இந்த இரண்டு பாடல்களுக்கு இனிமையான இசை அமைத்து, படத்தை பற்றிய எதிர்பார்ப்பை ஏகமாக எகிற வைத்து இருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.
எனக்கு மறைந்த கவிஞர் வாலி ஐயாவுடன் பணியாற்ற வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் என்னுடைய தயாரிப்பாளர்கள் சரண் மற்றும் செல்வா, அவருடைய பாடலைப் படமாக்க வாய்ப்பு தந்தது மறக்க முடியாதது. இந்த பாடல் சரண் அவர்களின் தயாரிப்பில் உருவான ‘ஆரண்ய காண்டம்’ படத்துக்காக எழுதப்பட்டது, ஆனால் படமாக்கப்படவில்லை. இந்த பாடலை எனக்கு கொடுக்கும் படி சரண் சாரிடம் கேட்ட போது அதற்கேற்ப நல்ல டியூனை நீ யுவனிடம் வாங்கினால் தருகிறேன் என்றார் . நான் யுவனிடம் சொல்ல, அவரும் சட்டென்று ஒப்புக் கொண்டு இந்த அருமையான பாடலை இசை வடிவமாக வழங்கினார். பாடல்களுக்கு கிடைத்துள்ள பெரும் வரவேற்பு படத்துக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
தணிக்கை முடிந்ததும் படம் செப்டம்பர் மாதம் வெளிவர உள்ளது,” என்கிறார் இயக்குனர்.