‘புலிப் பார்வை’ படத்திற்கு தமிழ் அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்கள் அனுமதி இல்லாமல் படத்தை வெளியிட மாட்டோம் என படத்தின் தயாரிப்பாளரான மதன் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இது தொடர்பாக நேற்று படத்தின் இயக்குனர் பிரவீண் காந்தியுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் தயாரிப்பாளர் மதன். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் இயக்குனர் பிரவீண் காந்தியிடம் “படத்தை வெறும் புகைப்பட ஆதாரம் ஒன்றை மட்டுமே வைத்து எடுத்தீர்களா ?” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த இயக்குனர் பிரவீண் காந்தி,
“எனக்கு இந்த ‘புலிப் பார்வை’ படத்தை எடுக்க ஆதாராமாக இருந்தது யூ டியூப் இணைய தளம்தான். அதில்தான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆலோசனைப்படி எடுக்கப்பட்ட ‘எல்லாளன்’ என்ற படத்தைப் பார்த்தேன். அந்தப் படம்தான் எனக்கு இன்ஸபிரேஷனாக அமைந்தது. அடுத்து சேனல் 4 வெளியிட்ட சில வீடியோ காட்சிகளையும் ஆதாரமாக எடுத்துக் கொண்டேன்,” என்றார்.
அவை மட்டுமே இந்தப் படத்தை எடுக்கப் போதுமா ? என அந்த பத்திரிகையாளர் தொடர்ந்து கேட்க,
“இன்னைக்கு நமக்கு எது வேணும்னாலும் யூ டியூப் போனாலே போதுமே. அங்க அவ்வளவு விஷயங்கள் குவிஞ்சி கிடக்கு. இந்தப் படத்துக்காக நான் பல ஆதாரங்களை யூ டியூப்ல இருந்துதான் எடுத்தேன். எவ்வளவோ வீடியோக்கள் குவிஞ்சி கிடக்கு. எனக்கு அது போதுமானதாக இருந்தது.
நான் ஏதாவது புத்தகம் எழுதறதா இருந்தால், புத்தகங்களை ஆதாரமா எடுத்துக்கலாம், ஆனால், நான் எடுத்தது திரைப்படம்தானே, அதுக்கு வீடியோ ஆதாரம் போதுமே ” என்றார்.
ஆக, எந்தவிதமான வரலாற்று ஆதாரங்களையும் தேடி எடுக்காமல், யூ டியூப்பில் மட்டுமே இருக்கும் வீடியோக்களை வைத்து, பல கற்பனைகளைக் கலந்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.
‘மொகஞ்சதாரோ’ என்ற ஒரு வரலாற்று ஹிந்திப் படத்தை உருவாக்க அப்படத்தின் இயக்குனரான அஷுதோஷ் கௌரிகர் சுமார் மூன்று ஆண்டு கால ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார் என்பதை படிக்க நேர்ந்தது. ஒரு காதல் கதையை உருவாக்கவே அவர் இவ்வளவு மெனக்கெடும் போது, பிரச்சனைக்குரிய ஒரு விஷயத்தை படமாக்கும் ‘புலிப் பார்வை’ இயக்குனர் பிரவீண் காந்தி அதற்கு எவ்வளவு விதமான ஆராய்ச்சிகளை செய்திருக்க வேண்டும் ?
போகிற போக்கில் சொல்கிற விஷயமா அது….?