‘துப்பாக்கி’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் மீண்டும் ‘கத்தி’ படம் மூலம் கூட்டணி சேர்ந்த உடனேயே அந்தப் படத்தின் மீது அதிகமான எதிர்பார்ப்பு எழுந்தது.
அதே அளவிற்கு அந்தப் படத்திற்கு எதிர்ப்பு எழும் என்று அவர்கள் கனவிலும் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். தமிழ் அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட முடிவெடுத்து, ‘கத்தி’ படத்திற்கு எதிராக மொத்தமாக குரல் எழுப்பியதன் விளைவு படத்தை எப்படியாவது காப்பாற்ற படக் குழு அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருக்கிறதாம்.
இதற்கு திரையுலகத்தைச் சேர்ந்த சிலரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘கத்தி’ படத்தின் முக்கியப் பிரச்சனையே அதைத் தயாரிக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு நெருக்கமான ஒரு நிறுவனம் என்பதுதான். எனவே, அந்த நிறுவனத்திடமிருந்து படத்தை வேறு ஒரு நிறுவனம் வாங்கி வெளியிட்டால் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்பட்டு விடும் என்று நினைக்கிறார்களாம்.
விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இருவருமே தமிழர்கள் என்பதால் அவர்களை எதிர்க்க தமிழர் அமைப்புகள் கொஞ்சம் யோசிக்கலாம், அவர்களுடைய எதிர்ப்பு படத்தைத் தயாரிக்கும் நிறுவனம் மீதுதான் இருக்கிறது என சிலர் யோசனை சொல்லி வருகிறார்களாம்.
அதனால், எந்த எதிர்ப்பையும் சமாளிக்கும் ஒரு மிகப் பெரிய நிறுவனத்திடம் படத்தை அப்படியே விற்றுவிட முடிவு செய்திருக்கிறார்கள் என்கிறார்கள். அந்த நிறுவனம் அநேகமாக மும்பையைச் சேர்ந்த நிறுவனமாக இருக்கலாம்.
இப்படி ஏதாவது செய்து ‘கத்தி’ படத்திற்காக இதுவரை செலவு செய் பல கோடிகளைக் காப்பபாற்றியாக வேண்டிய கட்டாயத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இருக்கிறார்.
ஆனால், இதுவரை இந்தப் பிரச்சனை குறித்து படத்தின் நாயகனாக விஜய் வாயே திறக்காதது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாம். அவர் என்ன செய்வார் பாவம், ஏற்கெனவே, ‘தலைவா’ படத்தின் தோல்வியால் தடுமாறிப் போயிருக்கிறார்.
எப்படியாவது ‘கத்தி’ படத்தை காப்பாற்றியே ஆக வேண்டும் என மட்டும் சொல்லி வருகிறாராம்.
தலைக்கு வந்த ‘கத்தி’ தலைப்பாகையோடு போகட்டுமே…என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் என்பது மட்டும் உறுதி…