‘கத்தி’ படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் அமைப்புகள் ஒரு பக்கம் போராடிக் கொண்டிருக்க, அப்படத்தின் கதை தன்னுடைய கதை என சென்னைக்கு அருகே உள்ள மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த கோபி என்பவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
மீஞ்சூர் கோபி என்பவர் ஒரு தலித் இலக்கிய படைப்பாளி. அவருடைய பகுதியில் பன்னாட்டு நிறுவனம் ஒன்று தொழிற்சாலை தொடங்குவதற்காக மக்களின் நிலத்தை அடிமாட்டு விலைக்கு கையகப்படுத்தியதால் எழுந்த பிரச்சனையை மையமாக வைத்து ‘மூத்த குடி’ என்ற பெயரில் ஒரு கதையை எழுதியிருக்கிறார்.
அந்தக் கதையை ஜெகன் என்பவர் மூலமாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் சொல்லியிருக்கிறார். கதையைக் கேட்ட முருகதாஸ் படத்தின் கதையில் சில மாற்றங்களைச் சொல்லியிருக்கிறார். நாயகனை இரண்டு கதாபாத்திரங்களாக மாற்றும்படியும், இன்னும் சில திருத்தங்களையும் சினிமாவுக்கு ஏற்றபடி மாற்றச் சொல்லியிருக்கிறார்.
அதன்படி கோபி கதையை மாற்றித் தயார் செய்து வைத்திருக்கிறார். அந்தக் கதையை முருகதாஸ் தயாரிக்க கோபி இயக்குவதாகவும் பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது. அதன்பின் முருகதாஸ் அந்தக் கதையை தற்போது படமாகத் தயாரிக்க முடியாது என சொல்லி ஒதுங்கிக் கொண்டுள்ளார்.
அதன் பின் முருகதாஸ், விஜய்யை வைத்து ஆரம்பித்த ‘கத்தி’ படத்தின் கதையைப் பற்றி சினிமா ஆட்களிடம் விசாரித்த கோபி அது தான் எழுதிய ‘மூத்த குடி’ கதையைப் போன்றே இருப்பதைத் தெரிந்த அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதைத் தொடர்ந்து தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அட்வகேட் கமிஷனர் ஒருவரை நியமித்து அவரிடம் இருவரும் அவர்களது கதைகளை ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. கோபி அவருடைய கதையை சமர்ப்பித்துவிட, முருகதாஸ் தரப்பு இன்னும் கதையை ஒப்படைக்காமல் இருக்கிறார்களாம்.
அவர்கள் வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருவதாகவும், அதனால் படத்தின் வியாபாரம் பாதிக்கப்படும் என்று சொல்லி வருவதாகவும் சொல்கிறார்கள்.
சமீபத்தில் கூட கமல்ஹாசன் நடிக்கத் தயாராகி வரும் ‘த்ரிஷ்யம்’ படத்தின் கதை தன்னுடைய ‘ஒரு மழைக்காலத்து’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டது என கேரள நீதிமன்றத்தில் ஒருவர் வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்றத்தில் பத்து லட்ச ரூபாய் பணத்தைக் கட்டிய பின் படத்தை ஆரம்பிக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அந்தத் தொகையைக் கட்டிவிட்டுத்தான் ‘த்ரிஷ்யம்’ தமிழ்ப் படத்தின் ரீமேக் படப்பிடிப்பு ஆரம்பமானது.
தற்போது ‘கத்தி’ படத்திற்கும் கதை பிரச்சனை எழுந்துள்ளது…