திரைப்படத் துறையினருக்கும், ஊடகத்துறையினருக்கும் இடையில் கடந்த சில தினங்களாக நிலவி வந்த அசாதாரண சூழ்நிலை, 25.09.2014 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின் முடிவுக்கு வந்தது. இது குறித்த செய்தியை ஏற்கனவே நாம் வெளியிட்டிருக்கிறோம்.
திரைப்படத் துறையினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, திரைப்பட அமைப்புகளின் சார்பாக ஒரு விஷயம் சுட்டிக்காட்டப்பட்டது. அதாவது, திரைப்படத்துறையின் நன்மை கருதி பல்வேறு கட்டுப்பாடுகளையும், ஒழுங்கு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட குழுவில் அங்கம் வகிக்கும் தயாரிப்பாளர்களை தனிப்பட்டமுறையில் தாக்கி பல இணையதளங்கள் செய்தி வெளியிட்டிருப்பதாக தங்களின் மன வருத்தத்தை நம்மோடு பகிர்ந்து கொண்டனர்.
அவர்களின் வருத்தத்தில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டு, அச்செய்திக்கு மறுப்பு செய்தி வெளியிடுவதாக உறுதி அளித்தோம். திரைப்படத்துறையினருடன் மோதல் போக்கு நிலவியபோது, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் டி.சிவா பற்றி நமது இணையதளத்திலும் ஒரு செய்தி வெளியிடப்பட்டது.
இயக்குனர், நடிகர்களை ஏக வசனத்தில் டி.சிவா பேசியதாக வீடியோ பேட்டியின் அடிப்படையில் அந்தச் செய்தி வெளியானது. திரைப்பட அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று சில தினங்களுக்கு முன்பே அந்தச் செய்தியை நீக்கிவிட்டோம். அச்செய்தியை வெளியிட்டதற்கு ஸ்கிரீன்4ஸ்கிரீன்.காம் சார்பாக நமது வருத்தத்தை இங்கே பதிவு செய்கிறோம்.
யாரையும் தனிப்பட்டமுறையில் காயப்படுத்த வேண்டும் என்பது எமது நோக்கமல்ல, திரைத்துறையினருடன் எந்தக் காலத்திலும் ஒற்றுமையாகவே இருக்க வேண்டும் என்றே நாமும் விரும்புகிறோம் என்பதை இதன் மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.