திரைப்படம் என்பது பொழுதுபோக்குச் சாதனமாகப் பார்க்கப்பட்டாலும் திரைப்படம் என்பது உருவான நாளிலிருந்து இன்று வரை அதன் வளர்ச்சி எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது.
அப்படிப்பட்ட வளர்ச்சியை பல சாதனையாளர்கள், திறமைசாலிகள் முன்னெடுத்துக் கொண்டு செல்கிறார்கள். அவர்களில் தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது, இந்தியத் திரையுலகிலும் பல அரிய சாதனைகளை புரிந்த ஏவி.மெய்யப்பன் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். இன்று அந்த மாபெரும் திறமைசாலியால் உருவாக்கப்பட்ட ஏவிஎம் நிறுவனம் 70வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது.
ஏ.வி.மெய்யப்பன் அவர்கள் 1934ம் ஆண்டிலிருந்து திரைப்படத் துறையில் இருந்தாலும் 1945ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதிதான் முதன் முதலில் ஏவிஎம் புரொடக்சன்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்.
சென்னை, மைலாப்பூரில், சாந்தோம் பகுதியில், தெற்கு தெரு, எண் – 60 என்ற வாடகை கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஏவிஎம் புரொடக்சன்ஸ் நிறுவனம் இன்று அக்டோபர் 14, 2014-ல் 70ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
சென்னையில் ஆரம்பிக்க நினைத்த ஏவிஎம் ஸ்டுடியோஸ் மின்சாரத் தேவை காரணமாக காரைக்குடியில் இயங்க ஆரம்பித்தது. முதலில் ‘நாம் இருவர்’ படத்தை 14.01.1947-ல் வெளியிட்டார் ஏவிஎம். பாரதியார் பாடல்கள் காட்சிகளாக எடுக்கப்பட்ட படம் இது. இதற்காக பாரதியார் பாடல்களின் உரிமையப் பெற்று பின் நாட்டுடமையாக்கப்பட்டது வரலாறு. 1948-ல் ‘வேதாள உலகம்’ படத்தை வெளியிட்டவுடன் ஸ்டுடியோவை சென்னைக்கு மாற்றினார் ஏவிஎம்.
1948 முதல் இன்று வரை ஏவிஎம் ஸ்டுடியோஸ் காலமாற்றங்களுக்கு ஏற்ப தன்னையும் புதுப்பித்து நிலைத்து நின்று இந்தியாவின் பழமையான ஸ்டுடியோஸ் என்ற புகழைப் பெற்றுள்ளது.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி மற்றும் சிங்கள மொழிகளிலும் 175க்கும் மேற்பட்ட படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த நிறுவனம் தயாரித்த “நாம் இருவர், வாழ்க்கை (3 மொழிகள்), சபாபதி, ஸ்ரீவள்ளி, வேதாள உலகம்” போன்ற படங்களை ஏவி.மெய்யப்பன் இயக்கியிருந்தார்.
ஏவிஎம் நிறுவனம் தயாரித்த ‘ஹம்பஞ்சி ஏக் டால்கே’ இந்திப் படம் 1957ஆம் ஆண்டு சிறந்த குழந்தைகளுக்கான படமாக, பிரதமர் விருதான தங்க மெடல் பெற்று நேருவின் பாராட்டுக்களைப் பெற்றது.
ராஜ்கபூர் – நர்கீஸ் நடித்து ஷங்கர் ஜெய்கிஷன் இசையமைத்த ‘சோரி சோரி’ படம் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெற்றது.
“அந்த நாள், தெய்வப் பிறவி, பாவ மன்னிப்பு, சர்வர் சுந்தரம்” சிறந்த படத்திற்கான மத்திய அரசின் சான்றிதழ் பெற்ற படங்களாக அமைந்தன.
“அன்னை, நானும் ஒரு பெண், குழந்தையும் தெய்வமும், ராமு” போன்ற படங்கள் சிறந்த படத்திற்கான வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றது. ‘பக்த பிரகலாதா’ தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்திய ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்ட படமாகும். ‘வாழ்க்கை’ படம் மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டது.
‘உயர்ந்த மனிதன்’ சிவாஜி கணேசனின் 125வது படமாக அமைந்தது. அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘பால் போலவே….’ பாடலைப் பாடிய பி.சுசீலாவுக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது. சிறந்த படத்திற்கான தமிழ்நாடு அரசு விருதும் கிடைத்தது.
‘சம்சாரம் அது மின்சாரம்’ சிறந்த ஜனரஞ்சப் படத்திற்கான மத்திய அரசின் தங்கப் பதக்கம் பெற்றது.
‘மின்சார கனவு’ படத்திற்கு சிறந்த நடனம் (பிரபு தேவா), சிறந்த இசை (ஏ.ஆர்.ரகுமான்), சிறந்த பின்னணிப் பாடகர் (எஸ்.பி.பாலசுப்ரமணியம்) பாடகி (சித்ரா) ஆகிய விருதுகள் கிடைத்தது. இப்படி தேசிய விருது பெற்ற பல சிறந்த படங்களை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது.
சிவாஜியின் 125வது படமான உயர்ந்த மனிதன், பாடல்களுக்காக விருது பெற்றது. சம்சாரம் அது மின்சாரம் சிறந்த ஜனரஞ்சக படத்திற்கான விருது பெற்றது. மின்சார கனவு மூன்று தேசிய விருதுகளை பெற்றது. இப்படி ஏவிஎம் தயாரிப்பில் விருது பெற்ற படங்களின் பட்டியல் நீளமானது.
சினிமாவில் நடிப்பவர்கள் அப்போது நடித்துக் கொண்டே பாட வேண்டும். நன்றாகப் பாடத் தெரிந்தவர்கள்தான் நடிக, நடிகையாராகவும் விளங்க முடியும். அதை மாற்றி முதன் முதலாக பின்னணி பாடும் முறைய அறிமுகப்படுத்தியது ஏவிஎம். அதேபோல படங்களை டப்பிங் செய்யும் முறையையும் ஏவிஎம்தான் அறிமுகப்படுத்தியது.
1937ல் பின்னணி பாடும் முறையை ‘நந்தகுமார்’ என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார் ஏவிஎம். 1938ல் ‘ஹரிச்சந்திரா’ என்ற கன்னட படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. இதுவே இந்தியாவின் முதல் ‘டப்பிங்’ படமாகும்.
ஏவிஎம் நிறுவனத்தால் சிவாஜி கணேசன் (பராசக்தி), எஸ்.எஸ்.ராஜேந்திரன்(பராசக்தி) டி.ஆர்.மகாலிங்கம் (ஸ்ரீவள்ளி), கமலஹாசன் (களத்தூர் கண்ணம்மா), வெஜயந்திமாலா (வாழ்க்கை), சிவகுமார் (காக்கும் கரங்கள்), நாகேஷ்வரராவ் (ஓர் இரவு), விஜயகுமாரி (குல தெய்வம்), கன்னட நடிகர் ராஜ்குமார் (பேடர கண்ணப்பா), பண்டரிபாய், மைனாவதி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.
இயக்குனர்கள் ப.நீலகண்டன், கே.சங்கர், பீம்சிங், ஏ.சி.திருலோகசந்தர், எஸ்.பி.முத்துராமன், இராம.நாராயணன், ராஜசேகர் மற்றும் பலர் ஏவிஎம் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள்.
ஏவிஎம் நிறுவனத்தில் 5 முதல்வர்கள் பணியாற்றி உள்ளார்கள். அண்ணாதுரை (ஓர்இரவு) கருணாநிதி (பராசக்தி), எம்.ஜி.ஆர் (அன்பே வா), என்.டி.ராமராவ் (பூகைலாஸ், ராமு, சிட்டி), ஜெயலலிதா (மேஜர் சந்திரகாந் உள்பட பல படங்கள்) ஆகியோர் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த படங்களில் பணியாற்றி உள்ளார்கள்.
இந்தித் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான ராஜ்கபூர், சுனில்தத், அசோக்குமார், நர்கீஸ், மீனாகுமாரி, தர்மேந்திரா, ஜிதேந்திரா, மற்றும் தெலுங்குத் திரையுலகில் நாகேஸ்வரராவ், கிருஷ்ணா, சிரஞ்சீவி, ஆகியோரும் பணியாற்றியுள்ளனர்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் பல படங்களை ஏவிஎம் நிறுவனம் தயாரித்துள்ளது. அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட இன்றைய முன்னணி நடிகர்களின் படங்களையும் தயாரித்த இந்நிறுவனம் அடுத்து ‘இன்டர்நெட்’தான் என்பதை உணர்ந்து அதற்காக ‘இதுவும் கடந்து போகும்’ என்ற படத்தையும் தயாரித்து இன்டர்நெட்டில் வெளியிட்டது.
சிவாஜிகணேசன் மற்றும் பிரபு, சிவக்குமார் மற்றும் சூர்யா, ருக்மணி அவரது மகள் லட்சுமி அவரது மகள் ஐஸ்வர்யா என தலைமுறைகளைத் தாண்டியும் படங்களைத் தயாரித்துள்ளார்கள்.
1980ம் ஆண்டுகளில் சின்னத் திரையான தொலைக்காட்சியும் வளரத் தொடங்கியது. அப்போது சின்னத் திரைத் தொடர்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வெற்றியைப் பெற்றது ஏவிஎம் நிறுவனம். தூர்தஷன் தொலைக்காட்சியில் ‘ஒரு மனிதனின் கதை’, ஒரு பெண்ணின் கதை,’ சன் டிவியில் “சொந்தம், வாழ்க்கை, நம்பிக்கை, சொர்க்கம், நிம்மதி உங்கள் சாய்ஸ், மங்கையர் சாய்ஸ்’, ஜெயா டிவியில் ‘மனதில் உறுதி வேண்டும்’, ராஜ் டிவியில் ‘சவாலே சமாளி’, கலைஞர் டிவியில் ‘வைர நெஞ்சம், உறவுக்குக் கை கொடுப்போம், மங்கையர் உலகம், வைராக்கியம்’ தற்போது ‘மோகினி’ வரை 1400 எபிசோடுகளுக்கும் மேலாக ஒளிபரப்பி தங்களது சின்னத் திரை பயணத்தையும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஏவிஎம்மின் தொண்டினைப் பாராட்டி மத்திய அரசு 2006ம் ஆண்டில் தபால் தலை ஒன்றை வெளியிட்டது. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஏவிஎம்மின் சிலையை அவர்களது வளாகத்தில் திறந்து வைத்துப் பாராட்டியது.
இந்தியத் திரையுலகில் குறிப்பிடத்தக்க பல சாதனைகளை படைத்த ஏவிஎம் நிறுவனம் அவர்களது வெற்றிகரமான கலை உலகப் பயணத்தை இன்று 70ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதன் மூலம் மேலும் ஒரு புதிய சாதனையை படைக்கிறது.
திரைப்பட உலகில் ஏவிஎம் புரிந்த சாதனையை எந்த திரை போட்டும் மறைக்க முடியாது….