‘கங்காரு’ என் பெயரை மாற்றும் – இயக்குனர் சாமி

kangaroo director sami‘‘உயிர், மிருகம், சிந்து சமவெளி’’ போன்ற விவகாரமான சர்ச்சைப் படங்களை இயக்கி பரபரப்பாகப் பேசப்பட்டவர் இயக்குனர் சாமி. தற்போது இப்படியும் ஒரு பாசமான படத்தை எடுக்க முடியுமா என அவர் இயக்கி வரும் படம் ‘கங்காரு’.

சாமி படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற ஒரு முத்திரை குத்தப்பட்டு அவருக்கென ஒரு ‘தனி’ பெயரை பெற்றுத் தந்திருக்றிகது. நான் அப்படிப்பட்ட இயக்குனர் அல்ல, என சொல்லி தற்போது ‘கங்காரு’ படத்தின் மூலம் பயணிக்க ஆரம்பித்திருக்கிறார் சாமி.

எப்படி ஒரு கங்காரு தன் குட்டியை வயிற்றுப் பையில் சுமக்கிறதோ அப்படி தன் தங்கையை மார்பிலும் தோளிலும் சுமக்கும் அண்ணனின் கதைதான் ‘கங்காரு’ என்கிறார் சாமி.

”நானும் பெரிய பெரிய இயக்குநர்கள் மாதிரி விதவிதமான கதைகளில் ரகம் ரகமான நிறங்களில் புதுப் புது படம் இயக்க வேண்டும் என்று நினைத்துதான் இங்கு வந்தேன். ஆனால் நினைத்தமாதிரி இங்கே நிலைமை இல்லை. யாரும் என்னைக் கண்டு கொள்ளவில்லை, என் மீது கவனமும் மற்றவர் பார்வையும் படவேண்டும் என்று நினைத்தேன். அதனால் தான் ஒரு பரபரப்புக்காக அப்படிப்பட்ட படங்களை இயக்கினேன். நான் கவனிக்கப்பட்டேன். ஆனால் பெயர் கெட்டு விட்டது. சாமி இப்படிப்பட்ட ஆசாமி என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

என் படங்களை விமர்சித்தவர்கள் கூட சாமி அழுத்தமாகக் கதை சொல்லத் தெரிந்தவன் என்பதை ஒப்புக் கொள்ளவே செய்தார்கள். அழுத்தமாகச் சொல்லத் தெரிந்ததால்தான் இவ்வளவு விமர்சனங்கள் வந்தன என்றும் என் நண்பர்கள் சொல்வதுண்டு.

எது எப்படியோ அது என் தவறுதான். பெயர் கெட்டுவிட்டது, மாற்ற வேண்டும், இனி நான் வேறு சாமி. இந்த சாமிக்குள் நிறைய கனவுகள் படைப்புகள் உள்ளன. அதற்குள் என்னை இப்படி தவறான முத்திரை குத்தி குறுகிய வட்டத்துக்குள் போட்டு அமுக்கி விட வேண்டாம். இந்த கெட்ட பெயரை மாற்றவேண்டும், துடைத்தெறிய வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் இப்போது ‘கங்காரு’ எடுக்கிறேன். இதன் மூலம் என் கெட்ட பெயரை மாற்றுவேன். இந்தப் படம் நிச்சயம் என் பெயரை மாற்றும்.

நம் மண்ணில் இன்னமும் ஈரமும் பாசமும் வற்றிப்போய் விடவில்லை. இன்னமும் பாசமலர் அண்ணன் தங்கைகள் இருக்கவே செய்கிறார்கள். அம்மா பிள்ளை பாசமும் இருக்கவே செய்கிறது. இதற்கு ஏராளமான நிஜக்கதைகள் இருக்கின்றன.

‘கங்காரு’ நவீன பாசமலர் என்று சொல்வேன். நிச்சயம் இது பேசப்படும், பாராட்டப்படும், எதுவும் மிகையில்லாதபடி சொல்லி இருப்பது நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும்.

முந்தைய படங்கள் பற்றி என் அம்மாவே என்னைத் திட்டியிருக்கிறார். இனியாவது ஒழுங்காக நல்ல மாதிரியாக படம் பண்ணு என்று சொன்ன என் அம்மாவே பாராட்டும்படி இப்படம் இருக்கும்,” என ஆணித்தரமாகச் சொல்கிறார் இயக்குனர் சாமி.

Read Previous

70வது ஆண்டில் ‘ஏவிஎம்’ நிறுவனம்…

Read Next

கமர்ஷியல் இயக்குனர் என்பது மகிழ்ச்சியே… – இயக்குனர் ஹரி