‘கத்தி…கத்தி’ என்றுதான் கடந்த சில நாட்களாகவே ஃபேஸ் புக்கிலும், ட்விட்டரிலும், யு டியூப் இணையதளங்களிலும் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருக்கிறோம்.
விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி ‘துப்பாக்கி’ படத்திற்குப் பிறகு ‘கத்தி’ படத்தை எப்படிக் கொடுக்கும் என்று ரசிகர்களுக்கு மட்டுமல்ல, திரையுலகத்தினருக்கும் மிகப் பெரும் ஆவல் இருந்தது.
அதோடு, இன்றைய இளைஞர்களின் இசையார்வமாக இருக்கும் அனிருத்தின் இசை வேறு. டிரெண்டுக்கு ஏற்றபடி அனைவருமே மாறிக் கொண்டிருப்பதில் திரையுலகம்தான் எப்போதுமே முன்னணியில் இருக்கும், அதற்கு ‘கத்தி’ படம் மிகப் பெரிய உதாரணம்.
‘ஏ.ஆர்.முருகதாஸ் – அனிருத் – விஜய்’ ஆகியோரின் இந்த முதல் கூட்டணி, இப்போது பேசப்படும் கூட்டணியாகிவிட்டது. 16ம் தேதியிலிருந்து வெளியான ‘கத்தி’ படத்தின் பாடல் டீசர்கள் இன்று வரை 25 லட்சத்திற்கும் மேல் யு டியூபில் பார்வையாளர்களை ஈர்த்தது.
நேற்று மாலை சரியாக 6 மணிக்கு யு டியுபில் வெளியிடப்பட்ட ‘கத்தி’ படத்தின் டீசர் ஒரே இரவில் சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமானவர்களால் பார்வையிடப்பட்டுள்ளது.
பொதுவாக, பகல் நேரங்களில்தான் ஒரு படத்தின் டிரைலரையோ, டீசரையோ ரசிகர்கள் பார்ப்பார்கள். ஆனால், ஞாயிற்றுக் கிழமையன்று மாலை வெளியிடப்பட்ட ஒரு டிரைலர் இரவு நேரத்திலேயே இத்தனை லட்சம் பார்வையார்களை ஈர்த்து புதிய சாதனையை படைத்துள்ளது.
‘கத்தி’ படத்தின் டிரைலரைப் பார்த்த பலரும் படத்தைப் பற்றி ‘பாசிட்டிவ்’ ஆன கமெண்ட்டுகளை அளித்து வருகின்றனர்.
கிராமத்தையும், விவசாயத்தையும் காப்பாற்றத் துடிக்கும் ஒரு துணிச்சலான இளைஞனின் கதையாக ‘கத்தி’ இருக்குமென எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தனது படங்களில் தொடர்ந்து சமுதாய அக்கறையுடன் கதையை அமைத்து வரும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அப்படிப்பட்ட ஒரு கதையைத்தான் இந்தப் படத்திலும் கொடுத்திருப்பார் என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.