தெலுங்குத் திரையுலகில் நம்பர் 1 நடிகையாக இருக்கும் சென்னைப் பெண் சமந்தா தற்போதுதான் தமிழில் முன்னணி இடத்தைப் பிடிப்பதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
விஜய் ஜோடியாக நடித்துள்ள ‘கத்தி’ படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. அடுத்து விக்ரம் ஜோடியாக ‘பத்து எண்ணுறதுக்குள்ளே…’ படத்திலும் நடித்து வருகிறார்.
தெலுங்கிலும் தொடர்ந்து முன்னணி ஹீரோக்கள் ஜோடியாக சில படங்களிலும் நடித்து வருகிறார். துறுதுறுப்பான நடிப்பாலும், அழகாலும் ரசிகர்களைக் கவர்ந்து வரும் சமந்தா இன்னும் மூன்று வருடங்களுக்குள் திருமணம் செய்து கொள்ள இருக்கிறாராம்.
இரண்டு நாட்களுக்கு முன் தெலுங்குத் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவரது திருமணத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார்.
“எனக்கு இன்னும் மூன்று வருடங்களில் 30 வயது ஆக உள்ளது. அப்போது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன், அதன் பின் குழந்தைகளையும் பெற்றுக் கொள்வேன். அப்போதுதான் எனது குழந்தைகளையும் வளர்க்க முடியும்.
எனது திருமணம் இன்னும் தள்ளிப் போனால், அதன் பின் எனக்கு 50, 60 வயது ஆகும் போது, எனது குழந்தை என்னை விளையாட அழைத்தால், நான் தட்டுத் தடுமாறிதான் போக வேண்டியிருக்கும். அதனால், குறிப்பிட்ட வயதிற்குள் திருமணம் செய்து கொள்வதுதான் நல்லது,” எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், அவர் யாரைத் திருமணம் செய்து கொள்வேன் என்பது பற்றி எதையும் சொல்லவில்லை. சமந்தாவும், சித்தார்த்தும் காதலிக்கிறார்கள் என நீண்ட நாட்களாகவே வதந்தி இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.