‘கத்தி’ பட வெளியீடு தொடர்பாக எழுந்த பிரச்சனையை தயாரிப்பு நிறுவனம் சுமூகமாகப் பேசித் தீர்த்து விட்டதாக நேற்று இரவு அறிவித்தது.
ஆனால், அடுத்த சில மணி நேரங்களுக்குள் ‘கத்தி’ படம் வெளியாக உள்ள சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கம், உட்லண்ட்ஸ் திரையரங்கம் ஆகியவை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளன. இரும்புக் கம்பிளாலும், பெட்ரோல் குண்டுகளாலும் அந்த திரையரங்குகளின் கண்ணாடிக் கதவுகள் உடைத்து நொறுக்கப்பட்டும், சேதப்படுத்தப்பட்டும் உள்ளன.
அதன் பிறகு இரண்டு திரையரங்குகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ‘கத்தி’ வெளியீடு பற்றி மீண்டும் ஒரு புதிய பிரச்சனை எழுந்துள்ளது.
நாளை திட்டமிட்டபடி ‘கத்தி’ படம் வெளியாகுமா என மீண்டும் ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான திரையரங்குகளில் இன்று காலை முதல் முன்பதிவு ஆரம்பமாக உள்ள நிலையில் தியேட்டர்கள் மீதான தாக்குதலால் முன்பதிவுக்கு பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இதனிடையே திரையரங்க உரிமையாளர்கள் இன்று மீண்டும் கூடிப் பேசி முடிவு எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தியேட்டர்கள் மீதான தாக்குதலை நடிகை ராதிகா சரத்குமார் கடுமையாகக் கண்டித்துள்ளார். “போராட்டக்காரர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், எதற்கு பொது இடங்களில் தாக்குதல் நடத்தி ஒரு படத்தின் வெளியீட்டைத் தடுக்க வேண்டும், இது சரியல்ல. அவர்களுக்கு பப்ளிசிட்டி வேண்டும் என்பதையே இந்த வன்முறைச் சம்பவம் உணர்த்துகிறது,” என அவரது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
திரைப்படங்களில் வருவதை விட ‘கத்தி’ வெளியீட்டு விவகாரம் முடிச்சு மேல் முடிச்சாக போய்க் கொண்டிருக்கிறது.