‘கத்தி’ படத்தின் சர்ச்சை முடிந்து படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
மழை நின்றும் தூவானம் விடாத குறையாக கேரளாவில் ஒரு ரசிகர் விஜய்யின் கட்அட்வுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய முயன்று தவறி விழுந்து மரணம், கூட்ட நெரிசலில் சென்னை புறநகரில் திரையரங்க உரிமையாளர் ஒருவர் மரணம் என அடுத்தடுத்து சில சர்ச்சைக்குரிய சம்பவங்களும் நடந்து முடிந்துவிட்டன.
இப்போது விஜய் ரசிகர்கள் அவர்களின் மனம் கவர்ந்த ஹீரோவின் மீது இருக்கும் அபிமானத்தால் விஜய்க்கு ஒரு சிலையை உருவாக்கி அதை இன்று பொது மக்களும் பார்க்கும் விதத்தில் சென்னையில் திறந்து வைக்க உள்ளார்களாம்.
இதற்காக விஜய் ஆளுயர சிலை ஒன்றை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். நீல நிற ஜீன்ஸ் பேண்ட்டும், வெள்ளை சட்டையும், ஒரு கூலிங் கிளாசும் அணிந்துள்ள தோற்றத்தில் அந்தச் சிலையை வடிவமைத்துள்ளார்கள்.
இன்று காலை 11 மணிக்கு சென்னை, புறநகர்ப் பகுதியான குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்க வளாகத்தில் இந்த சிலையை திறந்து வைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முதலில் இந்த சிலை சென்னையில் ஆலப்பாக்கம் என்ற இடத்தில்தான் திறந்து வைக்க முடிவு செய்திருந்தார்கள். ஆனால், திடீரென சிலை திறந்து வைக்கும் இடத்தை மாற்றி விட்டார்கள்.
குஷ்புவுக்கு கோயில் கட்டிய ஊரில், சிலை திறப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல என்கிறார்கள் சிலர்…ரசிகர்களா…உங்க ஆர்வத்துக்கு அளவேயில்லையா…