‘கிரௌட் ஃபண்டிங்’ முறையில் ஒரு திரைப்படம் தயாரிப்பதற்காக சில முதலீட்டாளர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடாகப் பெற்று படம் தயாரிக்கும் முறையை ‘மூவி ஃபண்டிங்’ என்ற நிறுவனம் மூலம் இயக்குனர்கள் ஜெய்லானி, முத்துராமலிங்கன் ஆகியோர் ஆரம்பித்துள்ளனர்.
ஜெய்லானி இயக்கத்தில் ‘சவுண்ட் கேமரா ஆக்சன்’, முத்துராமலிங்கன் இயக்கத்தில் ‘ரூபச் சித்திர மாமரக்கிளியே’ ஆகிய படங்கள் ‘மூவி ஃபண்டிங்’ நிறுவனம் மூலம் ஆரம்பமாக உள்ளதாக சில நாட்களுக்கு முன் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அவர்கள் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து அவர்களுடைய நிறுவனத்திற்கு பல போன் அழைப்புகளும், நேரடிச் சந்திப்புகளும், மெயில் தொடர்புகளும் என பலர் ஆர்வமுடன் அதைப் பற்றித் தெரிந்து கொள்ளவும், அதில் இணைய என்ன செய்ய வேண்டும் போன்ற பல சந்தேகங்களைக் கேட்டுள்ளனர். அவற்றிற்கு பொறுப்பான பதில்களை இயக்குனர்கள் ஜெய்லானியும், முத்துராமலிங்கனும் தெரிவித்து வருகிறார்கள்.
அவர்களுடைய முயற்சியின் பலனாக ஒரு வாரத்திற்குள்ளாகவே சென்னையைச் சேர்ந்த பொற்கோவன் என்பவர் 10 லட்ச ரூபாய் தொகையை ‘மூவீ ஃபண்டிங்’ நிறுவனத்தில் முதலீடு செய்து ‘சவுண்ட் கேமரா ஆக்ஷன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்று, இணை தயாரிப்பாளராகவும் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்.
அது பற்றி கருத்துத் தெரிவித்த பொற்கோவன், “எனக்கு சின்ன வயசுல இருந்தே நடிக்கணும்னு ஆசை. ஐ.டி-ல வேலை பார்த்துக்கிட்டே சினிமா வாய்ப்புத் தேடி அலைய முடியலை. மூவி ஃபண்டிங் பத்திக் கேள்விப்பட்டு அவங்களை அணுகிறேன். அவங்களோட அணுகுமுறை, செயல்முறை எல்லாமே ரொம்ப வெளிப்படையா இருக்கு. நான் ஆசைப்பட்டு நடிக்க வந்தாலும், அவங்க கதைக்கு நான் எந்த அளவுக்கு பொருத்தமா இருப்பன்னு எனக்கும் ஆடிஷன் நடத்தித்தான் தேர்வு பண்ணாங்க. அதோட நான் கொடுத்த பணத்துக்கும் என்கிட்ட முறையான அக்ரிமென்ட்டும் போட்டிருக்காங்க. படப்பிடிப்புக்கும் போகற நாளை ஆவலோட எதிர்பார்த்துக் காத்துக்கிட்டிருக்கேன், ” எனத் தெரிவித்தார்.
“எங்களோட மூவி ஃபண்டிங்ல முதல் முதலீடா பொற்கோவன் இணைஞ்சிருக்காரு. ‘சவுண்ட் கேமரா ஆக்சன்’ படத்திற்கு தேவையான 90 லட்சத்தில் 5 நாளில் 11% முதலீடு திரட்டப்பள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இன்னும் 40 நாட்கள் இருக்கின்றன. மீதம் 89% முதலீடு திரட்ட வேண்டியிருக்கிறது. இன்னும் சில நாட்கள் அல்லது நாங்கள் திட்டமிட்ட நாட்களுக்குள் அதையும் திரட்டி விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. பலரும் எங்களை அணுகி வருகிறார்கள், ” என ‘சவுண்ட் கேமரா ஆக்ஷன்’ படத்தின் இயக்குனரான ஜெய்லானி தெரிவித்தார்.
திரையுலகில் ஒரு வெளிப்படையான தயாரிப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ள மூவி ஃபண்டிங்- முறைக்கு இன்னும் அதிகப்படியான வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக ‘ரூபச்சித்திர மாமரக்கிளியே’ பட இயக்குனர் முத்துராமலிங்கன் தெரிவித்தார்.
‘மூவி ஃபண்டிங்’ அவர்களது முதல் அடியை வெற்றிகரமாக எடுத்து வைத்துள்ளார்கள்…மேலும் விவரங்களுக்கு…http://www.moviefunding.in/