2015ம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் படங்களிடையே கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை “ஐ, என்னை அறிந்தால், ஆம்பள” ஆகிய படங்கள் பொங்கலுக்கு வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள ‘ஐ’ திரைப்படம் தமிழகத்தில் மட்டுமே 400 திரையரங்குகளுக்கும் மேல் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் ‘என்னை அறிந்தால்’ படமும் 400 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுந்தர் .சி இயக்கத்தில் விஷால், ஹன்சிகா மற்றும் பலர் நடிக்க தயாராகி வரும் ‘ஆம்பள’ படமும் 300 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகும் என்கிறார்கள்.
தமிழ்நாட்டில் மொத்தமாக புதிய திரைப்படங்கள் வெளியிடும் திரையரங்குகள் என்று பார்த்தால் ஆயிரம் மட்டுமே தேறும் என்கிறார்கள். அப்படியிருக்க இந்த மூன்று படங்களுக்கும் திரையரங்குகளை ஒதுக்குவது சுலபமான விஷயம் அல்ல என்கிறார்கள்.
‘ஐ’ படத்தின் வசூலை சீக்கிரமே அள்ள வேண்டுமென்றால் குறைந்தது 500 திரையரங்குகளுக்கு மேல் திரையிட்டால்தான் ஒரு வாரத்திற்குள்ளாகவாவது போட்ட பணத்தை எடுக்க முடியும் என்கிறார்கள். அஜித் நடிக்கும் படத்திற்கு எப்போதுமே நல்ல ஓபனிங் கிடைக்கும், அது ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு மேலும் அதிகமாகும் என்கிறார்கள்.
இவர்களோடு விஷால் நடிக்கும் ‘ஆம்பள’ படமும் மோதத் தயாராகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷங்கர், அஜித் படங்களுடன் விஷால் துணிச்சலாக போட்டி போட்டு ‘ஆம்பள’ படத்தை வெளியிடுவது பெரிய விஷயம்தான்.
இதே போல் தீபாவளிக்கும் ‘கத்தி’ படத்திற்குப் போட்டியாக ‘பூஜை’ படத்தை வெளியிட்டு விஷால் நல்ல லாபத்தைப் பார்த்தார் என்கிறார்கள். அதே போல் பொங்கலுக்கும் விஷாலின் ‘ஆம்பள’ படம் எப்படியும் வசூலைப் பெற்று விடும் என்கிறார்கள்.
போட்டி, இந்த மூன்று படங்களுடன் நிற்குமா அல்லது இன்னும் அதிகரிக்குமா என்பது போகப் போகத்தான் தெரியும்…