காயத்ரி பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் பேரரசு இயக்கத்தில் பார்த்திபன், உன்னி முகுந்தன், அகன்ஷா பூரி மற்றும் பலர் நடிக்கும் ‘திகார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
‘திகார்’ பட இசையை ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி கிரண் பேடி வெளியிட கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் பேரன் சிதம்பரம் பெற்றுக் கொண்டார்.
திகார் ஜெயிலின் அதிகாரியாக அவர் இருந்து, அந்த ஜெயிலில் பல மாற்றங்களைக் கொண்டு வந்து இந்தியா முழுவதும் பேசப்பட்டதால் கிரண் பேடியை அழைத்தார்கள். சுதந்திரத்திற்கு முன் வெள்ளையர்களுக்குப் போட்டியாக கப்பலோட்டியதால் சிறைச்சாலையில் பல கொடுமைகளை அனுபவித்த வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை நினைவு கூறும் வகையில் அவருடைய பேரன் சிதம்பரம் அவர்களை அழைத்திருந்தார்கள். அவர்களிருவரும் ‘திகார்’ படத்தின் இசையை வெளியிடப் பொருத்தமானவர்கள்தான்.
அதே சமயம் இசை நிகழ்ச்சிக்கு பவர் ஸ்டார் சீனிவாசன் வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஒரு வேளை ‘திகார்’ சிறையில் உண்மையிலே சில நாட்கள் அவர் இருந்ததால், அந்த அனுபவங்களைச் சொல்வதற்காக அவரை அழைத்திருப்பார்களோ என்று எண்ணத் தோன்றியது. பின்னர் அவர் பேசிய போததான் அது புரிந்தது.
அவர் பேசுவதற்கு முன் இயக்குனர் பேரரசு, “மற்றவர்கள் எல்லாம் படத்தைப் பற்றிப் பேசுவார்கள், ஆனால் பவர் ஸ்டார் திகார் ஜெயிலில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றிப் பேசுவார் என பலத்த கைத்தட்டல்களுக்கிடையே தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய ‘திகார்’ ஜெயில் அனுபவங்களைப் பற்றி பவர் ஸ்டார் பேசியதாவது,
“ஃபங்ஷனுக்கு வாங்கன்னு கூப்பிட்டு உக்கார வச்சி இப்படிலாம் பண்ணக் கூடாது. இந்த நிகழ்ச்சிக்கு நான் வரணுமா, வேணாமான்னு யோசிச்சேன், எதையாவது கிண்டல் பண்ணுவாங்க, இருந்தாலும் பரவாயில்லை வருவோம்னு வந்தேன். எல்லாத்தையும் பார்த்துட்டோம், இதையும் பார்த்துடுவோம்னுதான் வந்தேன்.
ரமேஷ்கண்ணா சார், வெங்கடேஷ் சார்லாம் சொன்னாங்க. டெல்லிலாம் பரபரப்பா இருக்கும்னாங்க, அப்படிலாம் ஒண்ணுமேயில்லீங்க. திடீர்னு ஒரு நாள் நைட்டு 12 மணிக்கு டெல்லிக்கு கூட்டிட்டு போனாங்க. எதுக்குன்னு கேட்டேன், விசாரணைன்னு சொன்னாங்க. ஏங்க, முதல்லயே சொல்லக் கூடாது செலவுக்கு பணம்லாம் எடுத்து வச்சிருப்பேனேன்னு கேட்டேன்.
முதல்ல கொஞ்சம் யோசிச்சேன், எதுக்கு டெல்லிக்கு கூட்டிட்டு போறாங்க…தூக்கு ஏதாச்சும் போட்டுருவாங்களோன்னு…என்னதா ஆகுதுன்னு பார்ப்போமேன்னு கிளம்பிட்டேன்.
நான் வேணும்னே எந்தத் தப்பும் பண்ணலை, கூட இருந்தவங்க பழிவாங்கிட்டாங்க. கோடிக்கணக்கான ரூபாயை இழந்து, கோடிக்கணக்கான பொருளை இழந்து , இன்னைக்கு நான் இந்த இடத்துல இருக்கன்னா, அதுக்குக் காரணம் கடவுள்தான்.
டெல்லி ‘திகார்’ ஜெயில்ங்கறது உண்மையிலேயே நல்ல ஜெயில். இந்தியாவிலேயே எந்த ஜெயில்லயுமே ஐஸ் க்ரீம், கூல்டிரிங்ஸ், இதெல்லாம் கிடைக்காது, ஆனால் அங்க கிடைக்கும். என்னை நைட்டு எட்டு மணிக்கு கொண்டு போய் விட்டாங்க. ஒண்ணுமே தெரியலை, ஒரு ரூம் கொடுத்தாங்க, அங்க ரெண்டு பேர் படுத்திருந்தாங்க. என்னடா இதுன்னு யோசிச்சேன்.
நான் உண்மையிலேயே கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும், அங்க திகார் ஜெயில்ல இருக்கிற 1200 போலீசும் எனக்கு ரசிகரா மாறிட்டாங்க. அவங்க கிட்ட முதல் கேள்வி என்ன பவரு இங்க எதுக்கு வந்திருக்கீங்க, ஏதாச்சும் ஷுட்டிங்கான்னாங்க. நாம பொய் சொல்ல முடியாது, எப்படியும் 20 நாளாச்சும் இருந்தால்தான் பெயில் கிடைக்கும். ‘இல்ல…அப்படி..ஒரு வழக்கு விஷயமா வந்திருக்கன்னு சொன்னேன்…
பரவாயில்லை பவரு..இங்க இருக்கிறதப் பத்தி போய் படம் எடுங்கன்னாங்க. உங்க கூட ரூம்ல நைட்டு படுத்திருந்தது யாரு தெரியுமான்னு கேட்டாங்க, அவங்க கற்பழிப்பு கேஸ்ல உள்ள வந்தவங்கன்னாங்க…அப்பாடா…நம்மள விட்டாங்கடா சாமின்னு..நினைச்சேன்.
ஒரு நாள் இன்னொரு செல்லுக்குப் போனேன், அங்கப் பார்த்தால் பெரிய பெரிய முதலைங்க..சாதாரணமான ஆளுங்க கிடையாது. என்னைக் கேட்டாங்க, என்ன விஷயம்னு, இல்லங்க இந்த மாதிரி சின்ன விஷயம்ங்கன்னு சொன்னேன். என்னது சின்ன விஷயமா, நான் எவ்வளவு போட்டிருக்கேன் தெரியுமா…இரண்டாயிரம் கோடி..நான் கடப்பாரை…நீ குண்டூசி..ன்னாங்க.
எதுக்கு இத சொல்றன்னா, ஒவ்வொரு இடம் போகும் போதும், நமக்கு விதவிதமான அனுபவம் கிடைக்குது. இந்தியால எங்கு சென்றாலும் என்னால சமாளிக்க முடியும். நான் எல்லாத்தையும் விட்டுட்டேன், என் ரசிகர்கள்ல ஒருத்தன் சொன்னான், தலைவா நீ உள்ள போ, உனக்கு உயிரே கொடுப்பன்னான், ஆனால், ஒரு பாட்டில் தண்ணி கூட கொடுக்கலை.
இந்த ‘திகார்’ படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துக்கள், ” என பவர் ஸ்டார் சீனிவாசன் பேசினார்.