1980களின் பின்னணியில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘சுப்பிரமணியபுரம்’ படத்தைப் போன்றே தற்போது ‘போர்க்குதிரை’ என்ற ஒரு படம் தயாராகி வருகிறது.
பிரபல இயக்குனரான ராம்கோபால் வர்மாவின் உதவியாளராக இருந்த ஸ்ரீபிரவீண், தெலுங்கில் ராம்கோபால் வர்மா தயாரிக்க இளையராஜா இசையமைக்க, ஜெகபதிபாபு, விமலா ராமன் நடிக்க ‘காயம் 2’ என்ற படத்தை இயக்கியவர். தற்போது ‘போர்க்குதிரை’ படம் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். பரத் வி.எம் மற்றும் நந்தன் இசையமைக்கும் இந்தப் படத்தில் சைதன்ய கிருஷ்ணன், சாந்தினி, நாகிநீடு, கவிதா ஸ்ரீனிவாசன், பங்கஜ், சஞ்சய் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த ஒரு இயக்குனர் தமிழ்ப் படத்தை இயக்குவது ஏன் என்று இயக்குனரிடம் கேட்டதற்கு வித்தியாசமான படங்கள் தமிழில்தான் வருகின்றன, அவற்றிற்கு ரசிகர்களும் நல்ல வரவேற்பு தருகிறார்கள், ஆனால் தெலுங்கில் வெறும் கமர்ஷியல் படங்கள் மட்டுமே வருகிறது என பதிலளிக்கிறார்.
“1980ல் உசிலம்பட்டியில் நடக்கும், மதுரைப் பின்னணிக் கதைதான் இந்தப் படம். 80களில்தான் காதல் என்பதே மிகவும் உன்னதமாக இருந்தது. குடும்பங்களிலும் அண்ணன், தங்கை, அம்மா, அப்பா, என அனைவருமே மிகவும் பாசமாக இருந்த காலம் அது.
ஒவ்வொரு ஊருக்குச் சென்றாலும், அங்கு நமக்கு நல்ல அனுபவமும் இருக்கும், கெட்ட அனுபவமும் இருக்கும். இப்படத்தின் நாயகன் காளிக்கு உசிலம்பட்டி, ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கிறது. அதை அவன் போர்க்குணம் கொண்டு எப்படி எதிர்க்கிறான் என்பதுதான் இந்தப் படம்.
காதல், பாசம், நட்பு, யதார்த்தம் என ஒரு நிறைவான சினிமாவிற்குள் என்னவெல்லாம் இருக்குமோ அனைத்தையும் கலந்த இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறோம்.
1980களை கண்முண் கொண்டு வருவதற்காக கடுமையாக உழைத்திருக்கிறோம். அந்தக் காலத்திய இடங்கள், உடைகள், பொருட்கள் என அனைத்தையும் மிகவும் கவனத்துடன் செய்திருக்கிறோம்.
இப்படத்தின் நாயகன் சைதன்யா பல குறும்படங்களில் நடித்தவர், ஒரு கிளாசிக்கல் டான்சர். இந்தப் படம் மூலம் தமிழில் கதாநயாகனாக அறிமுகமாகிறார். நாயகியாக இயக்குனர் பாக்யராஜ் ‘சித்து +2’ படத்தில் அறிமுகப்படுத்திய சாந்தினி நடிக்கிறார். இந்தப் படத்தில் கிராமத்து பிராமணப் பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
‘பள்ளிக் கூடம், வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படங்களில் நடித்த நாகிநீடு, இப்படத்தில் கதாநாயகனின் தந்தையாக மிகவும் யதார்த்தமாக நடித்துள்ளார். போஜ்பூரி மெமாழில் பல படங்களில் நாயகனாக நடித்துள்ள பங்கஜ் என்பவரை வில்லனாக அறிமுகப்படுத்துகிறோம்.
மதுரை மண்ணின் மணமும், மக்களின் குணமும், அந்த மொழியின் தன்மையும் மிகவும் பிடித்துப் போனதால்தான் கதையை உசிலம்பட்டி பின்னணியில் எடுத்து வருகிறேன். ஓர் அப்பாவி இளைஞனுக்கும், அராஜகக்காரர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தமே இந்தப் ‘போர்க்குதிரை’,” என்கிறார் இயக்குனர் ஸ்ரீபிரவீண்.