வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், சாமி இயக்கியுள்ள படம் ‘கங்காரு’ . இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. படத்தின் முன்னோட்டத்தை கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும் போது,
“இந்த ‘கங்காரு’வை ரொம்ப நாளாக சுமந்து வருகிறேன். நான்கு ஆண்டுகள் முடிந்து இப்போதுதான் சனிப் பெயர்ச்சி நடந்துள்ளது. சினிமாவில் எல்லா சங்கங்களும் இயங்கி வந்தன. தயாரிப்பாளர் சங்கம் மட்டும் இயங்காமல் இருந்தது.
இந்தப் படத்தில் எனக்கு பல அனுபவங்கள் கிடைத்தன. அதில் ஒரு கசப்பான அனுபவம், அதைச் சொல்லியே ஆக வேண்டும். கொடைக்கானலில் மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஒரு நாள் பேட்டா கொடுக்கவில்லை என்று படப்பிடிப்பை நிறுத்தச் சொன்னார்கள். அதுவும் யார்…? லைட்மேன் சங்கம். அந்த சங்கத்தை சேர்ந்த ராஜாராம் என்பவர் போன் செய்து நிறுத்துகிறார். அவர் யாரு? பெப்ஸி தலைவர் அமீரா..? ஆனால் அவரோ, செல்வமணியா, விக்ரமனா யாரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள் என்று திமிராக மிரட்டுகிறார். எல்லா தொழிலிலும் முதலாளிதான் தொழிலாளிகளை கட்டுப்படுத்துவார்கள்.
சினிமாவில் மட்டும்தான் தொழிலாளிகள் முதல் போட்ட முதலாளிகளை கட்டுப்படுத்துகிறார்கள். இது என்ன கொடுமை? இதற்கு விடிவு காலம் என்ன? 150 பேர் வேலை பார்க்கும் ஒரு படப்பிடிப்பை ஒரு தனியாள் நிறுத்த முடியும் என்றால் அதற்கு என்ன அர்த்தம்?, ” என்று குமுறினார்.
சுரேஷ் காமாட்சிக்குப் பதில் அளிக்கும் விதத்தில் ஆர்.சுந்தர்ராஜன் பேசினார்.
‘திருமதி பழனிச்சாமி’ படத்தில் க்ளைமாக்ஸ் ஃபைட் கஷ்டப்பட்டு எடுத்தோம். 70 அடி உயரத்தில் இருந்து ஜீப் ஜம்ப் ஆகிற காட்சி. அவுட்டோரில் எடுத்ததை இங்கு வந்து போட்டுப் பார்த்தோம். அப்போது அருகிலிருந்த ஹீரோ சத்யராஜ் ‘டூப் நல்லா பண்ணியிருக்காருல்ல’ என்றார். உடனே நான், ‘உனக்காக நடித்தவன் அவன். குதித்த அவன்தான் ஒரிஜினல். உண்மையிலேயே அவனைப் போல் நடித்த நீதான் டூப்,” என்றேன். 25 லட்சம் சம்பளம் வாங்குற நீ டூப். 750 ரூபாய் சம்பளம் வாங்குற அவன்தான் ஹீரோ,’’ என்று சொன்னேன்.
ஒரு முறை இளையராஜா ஏழுபாடல்களைப் போட்டு வைத்துக் கொண்டு, கொடுத்தால் 7 பாடல்களையும் ஒரே படத்துக்குத்தான் கொடுப்பேன் என்றார் பிடிவாதமாக. பாலு மகேந்திரா போல பலரும் தன் படத்தில் நாலு சீக்வென்ஸ்தான் உள்ளன. 4 பாடல்கள் போதும் என்று கேட்டார்கள். ஆனால், அவரோ அந்தப் பாடல்களைக் கொடுக்க மறுத்தார்.
ஒரு இசையமைப்பாளருக்கு அவ்வளவு திமிர் இருந்தால், எழுத்தாளர் எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும், அதனால் அப்படி என்னதான் பாட்டு வைத்திருக்கிறார் என்று நினைத்து அவரிடம் போய் அந்தப் பாடல்களைக் கேட்டுப் பார்த்தேன். நானே அந்த ஏழு பாடல்களையும் வாங்கினேன், ஒரே படத்தில் பயன்படுத்தினேன். அந்தப் படம்தான் ‘வைதேகி காத்திருந்தாள்’. இதுதான் வித்தை திமிர்.
தயாரிப்பாளருக்கு என்றைக்கு திமிர் வருகிறதோ அன்றுதான் சினிமா உருப்படும் .தயாரிப்பாளர் என்கிற திமிர் இல்லாவிட்டால், நமக்குள் ஒற்றுமை இல்லா விட்டால் உங்களை யாரும் மதிக்க மாட்டார்கள், நம்மைக் காப்பாற்றவும் முடியாது,”என்றார் ஆர்.சுந்தர்ராஜன்.
விழாவில் ‘கங்காரு’ படத்தை உலகம் முழுவதும் வெளியிடும் கலைப்புலி எஸ்.தாணு, படத்தின் இயக்குனர் சாமி, அறிமுக இசையமைப்பாளர் ஸ்ரீனிவாஸ், நாயகன் அர்ஜுனா, நாயகி பிரியங்கா, நடிகை நமீதா, கோமல் சர்மா, தம்பி ராமையா, வெற்றிக் குமரன், இயக்குநர்கள் மனோஜ்குமார், வீ.சேகர், ஆர்.கே.செல்வமணி, கே.எஸ்.அதியமான், ஜெகன், வேல் முருகன், கேபிள் சங்கர், எடிட்டர் மணி, தயாரிப்பாளர்கள் டி.சிவா, பி.எல். தேனப்பன், கரு.நாகராஜன். ராதா கிருஷ்ணன், ஒளிப்பதிவாளர் ராஜரத்னம் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.
