‘லிங்கா’ படத்தின் தயாரிப்பாளரான ராக்லைன் வெங்கடேஷ் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் ரஜினிகாந்த் அரசியலில் இறங்கப் போவதைப் பற்றியும் வெளிப்படையாகப் பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
அதோடு, ‘லிங்கா’ படத்திற்காக ஏற்படுத்தப்பட்ட எதிர்ப்பு அரசியல் சதி என்றும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
“சிங்காரவேலன், ஒரு வினியோகஸ்தராக இருந்து கொண்டு ‘லிங்கா’ படத்தைப் பற்றி தவறான கருத்துக்களைச் சொல்லி படத்தைக் கெடுத்து விட்டார்.
‘லிங்கா’ படத்தின் மீதான எதிர்ப்பு திட்டமிட்ட அரசியல் உந்துதலால் ரஜினிகாந்தின் பெயரைக் கெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று. தமிழ்நாட்டில் ரஜினிகாந்த் என்பது மிகப் பெரிய பெயர். ரஜினி சாரின் அரசியல் வாழ்க்கையை திட்டமிட்டு சதி செய்ததில் சிங்காரவேலனின் பங்கு இருக்கிறது என நினைக்கிறேன்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை ரஜினி சார் அந்த வாய்ப்பைத் தவற விட மாட்டார் என நினைக்கிறேன். நூறு சதவீதம் ரஜினிகாந்த் அரசியலில் இறங்க வாய்ப்புள்ளது. எந்த கட்சி என்பதில் விஷயமில்லை. மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பது அவருடைய குறிக்கோள். அவர் மிகவும் சுத்தமானவர், அவருடைய குறிக்கோளும் சுத்தமானது. தமிழ்நாட்டைப் பற்றி அவருக்கு ஒரு பார்வை உள்ளது. நானும் அவருடைய லட்சோப லட்சம் ரசிகர்களில் ஒருவன். அவர் அரசியலில் இறங்க வேண்டும் என்பதும் ரஜினி ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.
‘லிங்கா’ படத்திற்கு எழுந்த பிரச்சனைகளால் ரஜினி சார் மிகவும் வருத்தமடைந்தார். சிலர் படத்தின் வெற்றியை தடுப்பதாக அவர் நினைத்தார். அவர் கடவுள் பக்தி கொண்டவர். கடவுள் அவர் பக்கம் இருக்கும் போது அவருடைய இடத்தை யாரும் மறுக்க முடியாது.
சில படங்கள் நஷ்டமடைந்த போது யாரும் அவர்களிடம் சென்று நஷ்டத்தைக் கேட்பதில்லை. ஆனால், ரஜினி படம் என்று வரும் போது அதைக் கேட்கிறாகர்கள். அவர் மிகவும் இளகிய மனம் கொண்டவர். ஆரம்பத்தில் சிங்காரவேலன் பேசுவதைக் கூட அவர் ஒரு ஏமாற்றத்தில் பேசுகிறார் என ரஜினி சார் எண்ணினார். ஆனால், அடுத்தடுத்த நாட்களில் அவர் ரஜினிகாந்த், கன்னடத் தயாரிப்பாளரை அழைத்து வந்து பணத்தைக் கொள்ளையடித்துப் போகிறார் என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார். அதன் பின் நான் அவரைச் சந்தித்த போது, நான் சிங்காரவேலனுக்கு ஆதரவு அளிக்க மாட்டேன் எனச் சொன்னேன். அதனால், முடிவை அவர் என்னிடம் விட்டு விட்டார்.
ஒப்பந்தப்படி, சிங்காரவேலன் பணத்தைத் திரும்பிக் கேட்கவே முடியாது. குடும்பத்துடன் படத்தைப் பார்க்க வருபவர்கள், சில நாட்கள் கழித்துத்தான் திரையரங்குகளுக்கு வருவார்கள். அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை ‘லிங்கா’ படத்திற்கு அமைவதை அவர் சீர்குலைத்து விட்டார்,” என்று ராக்லைன் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
1996ம் ஆண்டிலிருந்தே ரஜினி அரசியலில் நுழைகிறார்…நுழைகிறார்…என சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால், அப்படி எதுவும் இதுவரை நடக்கவில்லை.
ஒருவேளை ‘லிங்கா’ படத்திற்காக ஏற்படுத்தப்பட்ட எதிர்ப்பு அவரை அரசியலுக்குள் நுழைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.