மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமானுக்கு வைரமுத்து புகழாரம்…

‘ஓ காதல் கண்மணி’ படத்தின் பாடல்களின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக படத்தின் இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், வைரமுத்து, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், படத்தின் நாயகன் துல்கர் சல்மான், படத்தை தமிழ்நாடு முழுவதும் வாங்கி வெளியிடும் ஸ்டுடியோ க்ரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

நிகழ்ச்சியில் மற்ற அனைவரும் ரத்தினச் சுருக்கமாகப் பேசிவிட, வைரமுத்து மட்டும் வழக்கம் போல படத்தைப் பற்றியும், இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பற்றியும் புகழ்ந்து பேசினார். அவர் பேசியிதிலிருந்து…

“23 ஆண்டுகள் மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான், வைரமுத்து, இந்த கலைக் கூட்டணி தமிழ்த் திரையுலகில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. மணிரத்னம் அவர்களின் 24வது படம் ‘ஓ காதல் கண்மணி’.

24 படம்தானா என்று தயாரிப்பு எண்ணிக்கையில் கணக்குப் பார்த்தால் அது குறைவுதான். தர எண்ணிக்கையில் கணக்குப் பார்த்தால் அது அதிகம்தான். 24 படங்களிலும் 24 அனுபவங்களை திரை ரசிகர்களுக்கு மணிரத்னம் தந்திருக்கிறார் என்று நான் கருதுகிறேன்.

அவரது ஒவ்வொரு படத்தையும், சில படங்களை மூன்று முறை, சில படங்களை இரு முறை, சில படங்களை இரு முறை பார்த்திருக்கிறேன். அத்தனைப் படங்களிலும் அவர் தன்னை மீண்டும் நகல் எடுக்காமல் புத்தம் புதிய விழிகளில் பயணப்படுகிறார் என்று தோன்றுகிறது. அவருக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இந்தப் படத்தில் ஒரு சங்கீத சாம்ராஜ்யம் நடத்தியிருக்கிறார். இந்தப் பாடல்களை கேட்கிற இளம் ரசிகர்கள் கொண்டாடிக் கூத்தாடுகிறார்கள் என்பதை நான் அறிவேன். என்னைப் போன்ற மூத்தவர்களுக்கு இன்னுமொரு மூன்று முறை கேட்க வேண்டும் போல் தோன்றுகிறது. அதுதான் உண்மை.

ok kanmani press meetஇந்தப் படத்தில் பாடல்களில் நல்ல தமிழ் கையாளப்பட்டிருக்கிறது பெரும்பாலும் என்பதில் நான் நிறைவுகிறேன். பொதுவாக, தமிழ்ப் பாடல்கள் குத்துப் பாடல்களுக்கு அதிகமான முக்கியத்துவம் என்று சற்றே சாய்ந்திருக்கிற நிலையில் தன் கட்டுப்பாட்டிலிருந்து சற்றும் தளராமல், தன் கலை உயரத்திலிருந்து சற்றும் இறங்காமல் மணிரத்னம் அவர்களும், ரகுமான் அவர்களும் இந்தப் படத்தில் பாடல்களை கையாள வேண்டுமென்று எனக்கு ஒத்துழைத்தார்கள் என்பதில் நான் அவர்கள் இரண்டு பேருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இதில் ஒரு பாட்டு வருகிறது. அந்தப் பாட்டு தமிழில் கீர்த்தனை ம்மரபுக்கு ஒரு கொடையாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். தமிழிசை, தமிழிசை என்று பல பேர் தனியாக தமிழிசைப் பாட்டு எழுதவில்லையா என்று கேட்கிறார்கள். தமிழில் செய்யப்படுகிற எல்லாமே தமிழுக்கு நன்மை செய்கிற பாடல்கள்தான்.

பாரதியார் கவிதைகள் எழுதினார், அதுவே இசைப் பாடலாய் பரிணமித்தது. பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் தீட்டினார், அவையே இசைப் பாடல்களாக பரிணாமம் பெற்றன. நாங்கள் திரைப்படப் பாடல்களுக்கு எழுதுகிற பாடல்களே கூட கவிதையின் சாயலில், கீர்த்தனை மரபுகளுக்குப் பங்களிப்பு செய்கிற தொனியில் வந்து விழுந்திருப்பதை நான் பார்த்து மகிழ்ச்சியடைகிறேன்.

ஒரு நாள் மணிரத்னம் தொலைபேசியில் அழைத்து ஒரு பாடலைக் கேட்டார். அது கடவுளைப் பார்த்து பக்தன் பாடுவது போலவும் தொனிக்க வேண்டும், காதலன் காதலியைப் பார்த்து அல்லது காதலி காதலனைப் பார்த்துப் பாடுவது மாதிரியும் தொனிக்க வேண்டும். பொதுவான மொழியில் அந்தப் பாடல் இயங்க வேண்டும் என்று கேட்டார்.

நான் எழுதிக் கொடுத்தேன், எழுதிக் கொடுத்த பாடலுக்கு ஏ.ஆர்.ரகுமான் மிக அழகாக இசையமைத்திருக்கிறார். அவருக்கு மேற்கத்திய சங்கீதம் எவ்வளவு தெரிகிறதோ, இந்துஸ்தானி எவ்வளவு தெரிகறதோ, தமிழ்நாட்டு இசை மரபும் மிக அதிகமாக அவருக்கு ஈடுபாட்டோடு தெரிந்திருக்கிறது என்பதை இந்தப் பாடலில் நான் உணர்ந்து கொண்டேன்.

‘மலர்கள் கேட்டேன், வனமே தந்தனை…
தண்ணீர் கேட்டேன், அமிர்தம் தந்தனை…
எதை நான் கேட்பின், உனையே தருவாய்…
காட்டில் தொலைந்தேன், வழியாய் வந்தனை…
இருளில் தொலைந்தேன், ஒளியாய் வந்தனை…
எதனில் தொலைந்தால், நீயா வருவாய்…
பள்ளம் வீழ்ந்தேன், சிகரம் சேர்த்தனை…
வெள்ளம் விழுந்தேன், கரையில் சேர்த்தனை…
எதனில் விழுந்தால், உன்னிடம் சேர்ப்பாய்…”

என்ற இந்தப் பாடலுக்கு மிக அழகாக ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

maniratnam ar rahmanஇந்தப் படத்தில் வருகிற ‘பறந்து செல்லவா…’ ஒரு நல்ல பாட்டு, ‘நானே வருகிறேன்…’ மிகச் சிறந்த பாட்டு. இதைத் தவிர மணிரத்னம் அவர்களும், ஏ.ஆர்.ரகுமான் அவர்களும் ஒரு பாடலை எழுதியிருக்கிறார்கள். அதுதான் ‘மன மன மென்டல் மனதில்… பாட்டு’. அதில் கூட அழகாக ஒரு வரி எழுதியிருக்கிறார்கள். ‘நேற்று என்பது இன்று இல்லை…’ என்பது பளாரென்று நெஞ்சில் புகுந்து மனதில் ஒரு கிளர்ச்சியூட்டுகிற வரியை எழுதியிருக்கிறார்கள். இந்தப் பாடலை நீங்கள் ஏன் எழுதவில்லை என்று நீங்கள் என்னைக் கேட்கலாம். நான் ஊரில் இல்லை, நான் ஊரில் இல்லாத போது இரண்டு கவிஞர்கள் உருவாகிவிட்டார்கள்.

இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், என்று கேட்டார்கள், “இனி மேல் நான் வெளியூருக்குச் செல்லக் கூடாது என்று நினைக்கிறேன்,” என்று சொன்னேன். அந்த இடைவெளியை மிக அழகாக இட்டு நிரப்புகிறார்கள்.

இந்தப் படத்தைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். இந்தப் படத்தின் கதை, இந்திய சமூகத்தில் ஒரு கலாச்சார அதிர்ச்சியை உண்டாக்குகிற கதை. இந்தக் கலாச்சார அதிர்ச்சியை கலைஞர்கள் உருவாக்குகிறார்களா, சமூகம் உருவாக்குகிறதா என்பது மிகப் பெரிய கேள்வி. ஒரு திரைக்கலைஞன் கலாச்சார அதிர்ச்சியை உண்டாக்க முடியும். ஆனால், ஒரு வணிக எல்லைக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறான்.

என்னைப் போன்ற ஒரு படைப்பாளன் கலாச்சார அதிர்ச்சியை எழுத்தில் உண்டாக்கி விட முடியும், எந்த நஷ்டமுமில்லை. ஆனால், ஒரு திரைக்கலைஞன், அதே கலாச்சார அதிர்ச்சியை திரையில் கொண்டு வருவதற்கு பல கோடிகள் முதலீட்டோடு உள் இறங்க வேண்டும். அந்த கலாச்சார அதிர்ச்சி, வணிக ரீதியாகவும் ஒப்புக் கொள்ளப்பட்டால் அவன் தப்பிப்பான், இல்லையென்றால் அவன் பின்னிய கண்ணியில் அவனே மாட்டிக் கொள்வான் என்ற நிலைமை இருக்கிறது.

இதையெல்லாம் தாண்டி ஒரு பரிசோதனை முயற்சியாக மணிரத்னம் அவர்கள் இந்தப் படத்தை செய்திருக்கிறார். இன்னும் 50 ஆண்டுகளில் திருமணம் என்ற ஒரு நிறுவனம் இருக்குமா என்ற ஒரு பெரிய கேள்வி இந்திய சமூகத்தில் உலவுகிறது. உலக மயமாதல் என்ற ஒரு பெரிய ராட்சச அலையில் வட்டாரக் கலாச்சாரங்களும், மொழிகளும், தனிக் குழுப் பண்பாடுகளும், மெல்ல மெல்ல அதிர்வுகள் காணக் கூடிய ஒரு நிலையில் இந்தப் படம் வெளிவருகிறது. இந்த அடித்தளத்தை நெறித்துக் கொண்டு இந்தப் படத்தை நீங்கள் துய்த்தால் உண்மையின் வெளிச்சம் நம் கண்களுக்குப் பிரகாசமாகும் என்றே நான் நினைக்கிறேன்,” என வைரமுத்து பேசினார்.

Read Previous

ஜீ தமிழ் டிவியில் ‘ஜீன்ஸ்’ – புதிய நிகழ்ச்சி

Read Next

ரசிகர்களின் ரசனைக்கேற்ப இசையமைக்க வேண்டும் – வர்ஷன்

Most Popular