ஒரு டிக்கெட் விலை 175 ரூபாய் ?, அதிர்ச்சி தரும் தகவல்

திரைப்படங்களை தியேட்டர்களுக்கு சென்று பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வரும் நிலையில், தியேட்டர்காரர்கள் விரைவில் டிக்கெட் விலையை உயர்த்த வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை வைக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

சமீபத்தில் அனைத்து திரையரங்க உரிமையாளர்களின் சங்கங்களின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது இந்த டிக்கெட் கட்டண உயர்வு குறித்தும் விவாதிக்கப்பட்டதாம். டிக்கெட் கட்டணத்தை 175 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும், பார்க்கிங் கட்டணங்களை ஒரு மணி நேரத்திற்கான கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

ஏற்கெனவே பல மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 120 ரூபாய் கட்டணம் என்பது சராசரியாக உள்ளது. அது மட்டுமல்லாமல் பார்க்கிங் கட்டணமாக ஒரு படத்திற்கு 50 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். தியேட்டர் கேண்டீனில் விற்கப்படும் உணவுப் பண்டங்களின் விலையும் வெளி மார்க்கெட்டை விட மிகவும் அதிகமாகவே உள்ளது. இவற்றை எதிர்த்து இதுவரை பலர் குரல் கொடுத்து வந்தாலும் சரியான நடவடிக்கை எடுக்கப்படாமலேயே உள்ளது.

இதனிடையே, இந்தக் கட்டண உயர்வு விவகாரம் குறித்தும், க்யூப் நிறுவனங்களின் மீதான நடவடிக்கைகள் குறித்தும் திரையுலக சங்கங்களுக்கிடையில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
அதைத் தொடர்ந்து மே 1ம் தேதி முதல் புதிய தமிழ்ப் படங்களுக்கு பூஜை போடுவதை நிறுத்தி வைக்க தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்பட்டால் இனி ஒரு படத்தை தியேட்டர்களுக்கு ஒருவர் சென்று பார்ப்பதற்கே 500 ரூபாய் வரை தேவைப்படும் என்ற நிலையே உருவாகும். சம்பந்தப்பட்டவர்கள் இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதுதான் இப்போது திரையுலகத்தினரின் கேள்வியாக உள்ளது.

Read Previous

‘நாலு பேரு நாலு விதமாப் பேசுவாங்க’…

Read Next

‘உத்தம வில்லன்’ – எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வெளியீடு

Most Popular