‘உத்தம வில்லன்’ – எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வெளியீடு

‘உத்தம வில்லன்’ படத்தைப் பற்றி எழுந்த சில பிரச்சனைகள் குறித்து விளக்கமளிப்பதற்காக தமிழ்த் திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

தயாரிப்பாளர் சங்கம், கில்டு, வினியோகஸ்தர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய தயாரிப்பாளர், இயக்குனர் லிங்குசாமி, “உத்தம வில்லன்’ வெளியீடு தொடர்பாக சில பிரச்சனைகள் இருந்தன. அவற்றை சுமூகமாகத் தீர்த்துக் கொண்டோம்.

‘விஸ்வரூபம்’ பிரச்சனையை ‘உத்தம வில்லன்’ படத்துடன் தொடர்புப் படுத்தக் கூடாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற செலவுகளை நாங்களே ஏற்பதாக தெரிவித்துள்ளோம்,” என லிங்குசாமி கூறினார்.

‘உத்தம வில்லன்’ பிரச்சனைக்காக சிலரால் ஏற்படுத்தப்பட்ட விவகாரம், சங்கத்தினர் முன் தீர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இப்படம் மே 1ம் தேதி வெளியாகும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் எங்களுக்குள் ஒரு கூட்டு கமிட்டியை அமைத்து பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள உள்ளதாக பிரபல வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் அறிவித்தார்.

இதற்கு மேல் யாரும் யாருக்கும் எந்தப் பிரச்சனையையும் செய்ய மாட்டார்கள் என கூட்டமைப்பால் அறிவிக்கப்பட்டது. இனி, எந்த வதந்திகள் வந்தாலும் எங்களைத் தொடர்பு கொண்டு கேட்டு அதற்குப் பிறகு மீடியாக்கள் எழுத வேண்டும் என்று கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

கமல்ஹாசன் அளித்த புகாரையும் திரும்பப் பெற்றுக் கொள்ளத் தயாராக உள்ளார் என்றும், அவர் சார்பாக அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

இந்த தமிழ்ப் புத்தாண்டு, தமிழ் சினிமாவிற்கு நல்ல ஆண்டாக அமையட்டும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.தாணு வாழ்த்துத் தெரிவித்தார்.

Read Previous

ஒரு டிக்கெட் விலை 175 ரூபாய் ?, அதிர்ச்சி தரும் தகவல்

Read Next

Zee Tamil – Tamil New Year Programmes

Most Popular