விஜயா மருத்துவமனை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஸ்ரீ நாகி ரெட்டி நினைவு திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று மாலை சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் சென்ற ஆண்டின் மிகச்சிறந்த பொழுது போக்கு திரைப்படத்துக்கான விருது ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் வெளியான ‘மெட்ராஸ்’படத்துக்கு வழங்கப் பட்டது.
ஸ்டுடியோ க்ரீன் சார்பில் அதன் இணை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விருதை பெற்றுக்கொண்டார். விருது வழங்கி ஜார்கண்ட் உயர்நீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம்.கற்பக விநாயகம் பேசினார்,அவர்பேசும் போது..
” இந்த விழாவில் நான் கலந்து கொள்வதில் பெருமைப் படுகிறேன். ஒரு மனிதன் உயர்வதற்கு பின்பற்ற ஐந்து விஷயங்கள் தேவை .
1. இறை நம்பிக்கை. 2. உழைப்பு 3. ஒழுக்கம் 4. நாணயம் 5.மனிதநேயம்.
இப்படி பின்பற்றி உயர்ந்தவர்களில் எனக்கு மூன்று பேரை பிடிக்கும். பி.நாகிரெட்டி, ஆரூர்தாஸ், எஸ்.பி.முத்துராமன். இவர்களின் ஆற்றல் சாதனைகளை விட தனி மனித ஒழுக்கம் மிகச் சிறந்தது என்று மதிக்கப்படுகிறவர்கள். நாகிரெட்டி சாதனைகளாலும் பேசப்படுகிறவர்.
இங்கே சரோஜாதேவி வந்திருக்கிறார். அவர் நின்றாலும் அழகு, நடந்தாலும் அழகு, ஆடினாலும் அழகு, ஓடினாலும்அழகு, பேசினாலும் அழகு, ஏன் அழுதாலும் அழகுதான். எம்.ஜி.ஆர்., சிவாஜி என்கிற இரு இமயமலைகளை ஈர்த்தவர் சரோஜாதேவி. எனக்கு இன்றும் பழைய நினைவுகள் நிழலாடுகின்றன.
எனக்கு சினிமா மீது மிகவும் ஆர்வம். பள்ளி, கல்லூரி பருவத்தில் நிறைய நாடகங்களில் நடித்திருக்கிறேன். சுமார் 500 நாடகங்களில் நடித்திருப்பேன். பாரதியாக, அர்ஜுனனாக எல்லாம் நாடகங்களில் நடித்திருக்கிறேன்.
எனக்கு சினிமாவில் தெரிந்தவர் எம்.ஜி.ஆர்தான்.நான் அவருடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன். நான் எம்.ஜி.ஆருக்காக சிறை சென்று இருக்கிறேன். நான் சாதாரண வக்கீலாக இருந்தவன் என்னை அரசு வக்கீலாக்கி அழகுபார்த்தவர் எம்.ஜி.ஆர்தான். ஆம் அவர்தான் என்னை அரசு வழக்கறிஞராக்கினார். அப்போது எனக்கென்ன தெரியும் என்றேன். உனக்குத் தெரியும் என்றார். நான் நீதிபதியானபோது அவர் உயிருடன் இல்லை. ஆனால் அவரது ஆசீர்வாதம் இருந்தது. இந்த நிகழ்ச்சியிலும் ரெட்டியாரின்ஆசீர்வாதம் நிறைந்து இருக்கிறது. உழைப்பவரே உயர்ந்தவர் என்பார் எம்.ஜி.ஆர்., உழைப்பவரை உயர்த்தியவர் நாகிரெட்டி அவர்கள்.
ஒரு முறை ஏவிஎம் திருமண விழாவில் ஒரு பந்தியில் சாப்பிட்ட இலைகளை எடுக்க ஆள் வரவில்லை. ரெட்டியாரே சாப்பிட்ட இலைகளை எடுத்தார். பின்னர் சாப்பிட வந்தவர்கள் எடுக்க ஆரம்பித்தனர் அவ்வளவு எளிமையானவர் நாகிரெட்டியார்.
அவர் மற்றவர்களுக்காக வாழ்ந்தவர், பிறருக்காக வாழ்ந்து பெருமை பெற்றவர். மரங்களில் 3 வகை மரங்கள் உண்டு. பாதிரிமரம் பூக்கும், காய்க்காது. பலாமரம் காய்க்கும், பூக்காது. மாமரம் பூக்கும், காய்க்கும், பழுக்கும். அதே போல மனிதர்களிலும் 3 வகைஉண்டு. சிலர் பேசுவார்கள், செய்யமாட்டார்கள். சிலர் செய்வார்கள், பேசமாட்டார்கள். சிலர் மட்டுமே பேசுவார்கள், செய்வார்கள், உதவுவார்கள்.
நாகிரெட்டியார் மாமரம் போன்றவர். அவர் பேசுவார்,செய்வார்,உதவுவார். அவர் பெயரில் விருது பெறும் மெட்ராஸ்’ தயாரிப்பாளர், படக்குழுவினரை பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
படிக்கும் போது நான் மந்தமான மாணவன்தான். எஸ்.எஸ்.எல்.சியில் பெயிலாகி விட்டேன். தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தேன். காந்தியின் ‘சத்திய சோதனை’ படித்தேன், அது என் மனதை மாற்றியது, பாடமாக அமைந்தது.
இப்போது படங்களில் 99% வன்முறைதான் இருக்கிறது. கருத்து ஒரு சகவிகிதம்தான் இருக்கிறது. எம்.ஜி.ஆர். படங்களில் எவ்வளவு கருத்தைக் சொல்லியிருக்கிறார். ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தார்…’ பாடலைப் பாருங்கள். ‘உன்னை அறிந்தால்…’ பாடலைப் பாருங்கள். இரண்டே வரிகளில் எவ்வளவு கருத்துகள்.
படம் எடுங்கள் பாடமும் சொல்லுங்கள். படங்களில் நல்ல கருத்தும் இருக்க வேண்டும்,” என்று அவர் பேசினார்.