சிம்பு, ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ள ‘வாலு’ திரைப்படம் மேலும் ஒரு வாரம் தாமதமாகவே வெளியாகும் என்று தெரிகிறது. முதலில் இந்தப் படம் மே 9ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின் அவ்வப்போது படம் மே 9ம் தேதி வெளியாகும் என்ற விளம்பரங்களும் வெளியிடப்பட்டு வந்தது.
ஆனால், தற்போது திடீரென படத்தின் வெளியீட்டை மேலும் ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்திருக்கிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாமதத்தைத் தயாரிப்பாளர்தான் செய்கிறார் என்றும் சொல்கிறார்கள். அது வியாபார ரீதியிலான தாமதமாக உள்ளதாகத் தெரிகிறது.
‘வாலு’ படத்தின் டீசருக்கும், பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களாகவே படத்தின் வியாபாரப் பேச்சுக்கள் நடந்து வருகிறது. ஆனால், படத் தயாரிப்பாளரோ ஒவ்வொரு ஏரியாவுக்குமான படத்தின் விலையை மிகவும் அதிகமாகச் சொல்வதாக வினியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
‘வாலு’ படம் மிக நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்து வருவதால் படத்தின் பட்ஜெட் நிறையவே ஆகிவிட்டது. அவற்றை ஓரளவிற்கு சரி செய்யவே படத்தின் தயாரிப்பாளர் விலையை நிர்ணயம் செய்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.
மே 15ம் தேதி வருவதாக இருந்த ‘மாஸ்’ படம் 29ம் தேதிக்கு வெளியாக வாய்ப்புள்ளதால்தான் ‘வாலு’ படத்தை மே 15ம் தேதி ரிலீஸ் செய்யலாம் என தயாரிப்பாளர் முடிவு செய்திருக்கிறார் என்கிறார்கள். அதற்குள் படத்தை நல்ல விலைக்கு விற்க முடியும் என்றும் அவர் நம்புகிறாராம்.
மே 15ம் தேதியன்று ‘புறம்போக்கு’ படம் மட்டுமே வருவதால் ‘வாலு’ படத்திற்கும் பெரிய போட்டி இருக்காது என்று நினைக்கிறார்களாம்.
‘வாலு படம் வெளியாக மேலும் ஒரு வாரம் காத்திருக்க வேண்டுமா அல்லது படம் இன்னும் தள்ளிப் போகுமா என்பதை சிம்பு ரசிகர்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.