கோ.தனஞ்செயன் எழுதிய ‘PRIDE OF TAMIL CINEMA – 1931 To 2013’ என்ற ஆங்கில புத்தகத்திற்கு, சினிமா எழுத்திற்கான சிறந்த புத்தக (சிறப்புபரிசு) விருது, டெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் நேற்று தனஞ்செயனுக்கு வழங்கப்பட்டது.
‘PRIDE OF TAMIL CINEMA – 1931 To 2013’ என்ற தலைப்பிட்ட இந்த புத்தகம் தேசிய விருது பெற்ற தமிழ் படங்கள் பற்றியும், இந்தியன் பனோரமா விழாவில் திரையிடப்பட்ட தமிழ் படங்கள் பற்றியும் ஆராய்ந்த பல அரிய புகைப்படங்களுடன் 614 பக்கங்களில் விரிவாக எழுதப்பட்ட புத்தகமாகும்.
வேற்றுமையில் ஒற்றுமை என்கிற அடிப்படையில் நமது நாட்டின் கலாச்சார பெருமைகளை நிலை நாட்டிய படங்களைப் பற்றிய முக்கிய தொகுப்பு இந்தப் புத்தகம். 83 ஆண்டுகளாக கோலோச்சி வரும் தமிழ் சினிமாவின் பெருமை பற்றியும் தேசிய அளவில் தமிழ் படங்களுக்கு அங்கீகாரம் கொடுத்த நடுவர்களுக்கும் சமர்பிக்கபட்ட புத்தகம் இது.
இந்தபுத்தகத்தின்ஆசிரியர்கோ.தனஞ்செயன், எம்.பி.ஏ பட்டப் படிப்பு படித்த, ஒரு வியாபார மேலாண்மை அதிகாரி ஆவார். தற்போது டிஸ்னி – யு.டி.வி நிறுவனத்தின் பிரதான பொறுப்பில் இருக்கும் இவர் சினிமாவை பற்றிய ஆய்வு கட்டுரைகள் பல்வேறு பத்திரிகைகளில் எழுதி பிரபலம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலத்தில்2 011 ஆம்ஆண்டு இவர் எழுதிய “பெஸ்ட் ஆப் தமிழ் சினிமா” சர்வதேச அரங்கில் பெரும் பெயர் பெற்ற ஒரு புத்தகமாகும்.
விருது பெற்றது பற்றி கோ.தனஞ்செயன் கூறும்போது “என் வாழ்க்கையில் ஒரு பொன்னான நாள் இன்று. என் மனைவி மற்றும் அவர் தந்தையின் முன்னிலையில் ஜனாதிபதியின் கையால் என் எழுத்துக்கு கிடைத்த விருது தமிழ் சினிமாவுக்கு உரித்தானது.
தமிழ் சினிமாவின் பெருமைகளை உலகிற்கு எடுத்துரைத்த என் புத்தகத்திற்கு கிடைத்த இந்த விருதால், தமிழ் சினிமாவிற்கு மேலும் ஒரு பெருமையும் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. இந்த விருது மேலும் எழுதவும் என்னை ஊக்குவிக்கிறது,” என்று பெருமிதத்துடன் கூறினார்.