‘பன்னீர் புஷ்பங்கள்’ என்ற படத்தில் நாயகனாக அறிமுகமாகியவர் சுரேஷ். அதன் பின் பல காதல் படங்களில் நடித்தார். தமிழில் மிகப் பெரும் நாயகனாகவெல்லாம் அவரால் ஜொலிக்க முடியவில்லை.
80களில் அவருடன் ஜோடி சேர்ந்து நடித்த நதியா, ராதா, போன்ற நடிகைகளால் தான் அவரும் ஓரளவிற்கு ரசிகர்களுக்குத் தெரிந்த ஒரு நடிகராக இருந்தார்.
இப்போது சமையல் நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து கொண்டிருக்கிறார். சில மணி நேரத்திற்கு முன் திடீரென ‘பாகுபலி’ படத்திற்கு நான் ஆதரவு தர மாட்டேன் என டிவிட்டரில் தெலுங்கு நடிகர்களுக்கு ஆதரவாகவும், தமிழ் நடிகர்களான சத்யராஜ், நாசர் போன்றவர்கள் அந்தப் படத்தில் நடித்திருப்பதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பதிவு ஒன்றைப் போட்டுள்ளார்.
‘பாகுபலி’ படத்தில் தமிழின் சிறந்த நடிகர்களான சத்யராஜ், நாசர் இருவரும் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதில், “ராஜமௌலிக்கும், ‘பாகுபலி’ படத்திற்கும் நான் ஆதரவு தர மாட்டேன். ஜெகபதி பாபு, சுமன், சாய்குமார் போன்ற நடிகர்கள் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடிக்கச் சிறந்தவர்கள் இல்லையோ என ராஜமௌலி நினைத்திருக்கிறார்,” என போட்டிருக்கிறார்.
ஆனால், படத்தில் நடித்துள்ள நடிகைகளான கன்னடத்தைச் சேர்ந்த அனுஷ்காவிற்கோ, மராட்டியத்தைச் சேர்ந்த தமன்னாவிற்கோ, தமிழ்நாட்டைச் சேர்ந்த ரம்யா கிருஷ்ணனுக்கோ, படத்தில் பணி புரிந்துள்ள பல நூற்றுக்கணக்கான தொழில்நுட்பக் கலைஞர்களுக்கோ அவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
நடிகர் சுரேஷின் இந்த குறுகிய மனப்பான்மை கொண்ட பதிவுக்கு டிவிட்டரிலேயே பல ரசிகர்களும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சங்கம் தேர்தல் பரபரப்பில் தமிழ் நடிகர்கள் சுரேஷ் சொன்ன கமெண்ட்டைக் கண்டு கொள்வார்களா என்பது தெரியவில்லை…?