அறிமுக இயக்குனர்களான முருகானந்த், தங்களது முதல் படத்திலேயே நகைச்சுவையில் முத்திரை பதித்திருக்கிறார்கள். சந்தானத்தை ரசிகர்கள் எப்படிப் பார்க்க ஆசைப்படுவார்கள் என்பதை சரியாகப் புரிந்து வைத்து, அவரது பாணியிலேயே ஒரு நகைச்சுவைக் கதையைத் தேர்ந்தெடுத்து படத்தையும் கலகலப்பாக நகர்த்தி ரசிக்க வைத்திருக்கிறார்கள். சந்தானம், தான் எப்டிப்பட்ட நாயகனாக நடித்தால் ரசிகர்கள் விரும்புவார்கள் என்பதை இந்தப் படத்தின் வெற்றி மூலம் புரிந்து கொள்வார். பாக்யராஜ் பாணியிலான கதையில் சந்தானத்தில் நகைச்சுவைச் சரவெடி படத்தை நன்றாகக் காப்பாற்றியிருக்கிறது. சந்தானத்திற்கு மூன்று மாதத்திற்குள் திருமணம் நடத்தியாக வேண்டும் என்று ஜோசியர் சொல்ல, அதனால் அவரது பெற்றோர் அவருக்குத் தீவிரமாகப் பெண் பார்க்க ஆரம்பிக்கின்றனர். ஆனால், சந்தானத்தின் நண்பர்கள் காதல் திருமணம்தான் சிறந்தது எனச் சொல்ல சந்தானம் காதலிக்க ஒரு பெண்ணைத் தேடுகிறார். அவருடைய பார்வையில் ஆஷ்னா சவேரி விழ, இவர்தான் தன் காதலி என துரத்தித் துரத்திக் காதலிக்கிறார். ஆனால், ஆஷ்னா காதலை வெளியில் சொல்லாமல் மறைக்க, ஒரு சந்தர்ப்பத்தில் சந்தானத்திற்கும், அகிலா கிஷோருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து விடுகிறது. இதை மறைத்து தொடர்ந்து ஆஷ்னாவிடமும் பழகி வருகிறார் சந்தானம். ஒரு கட்டத்தில் உண்மை தெரியவர அதன் பின் என்ன நடந்தது என்பதுதான் எதிர்பாராத கிளைமாக்ஸ். சந்தானம், நாயகனாக நடிப்பதற்காக தன்னை நன்றாகவே மெருகேற்றிக் கொண்டிருக்கிறார். மேக்கப்பிலும் தனி வித்தியாசம் தெரிகிறது. நடனத்தில் ஹீரோக்களுக்கு இணையாக ஆடுகிறார். வழக்கம் போல டைமிங் காமெடியில் ரசிக்க வைக்கிறார். அதிலும் ‘நயன்தாரா கூட நைட்டில சுமாராதான் இருக்கும்’ என்கிற வசனம் பேசும் போது தியேட்டரே கை தட்டுகிறது. ஆஷ்னாவின் அழகில் அதிகமாகவே மயங்கி விழுந்தாற் போல நடித்துள்ளார், அகிலாவிடம் நெருங்கவே இல்லை. இதே நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்தால் சந்தானத்தில் ஹீரோ பயணம் தடங்கல் இல்லாமல் போய்க் கொண்டிருக்கும். ஆஷ்னா சவேரி எப்படி நடித்திருக்கிறார் என்று எங்கே பார்க்க முடிகிறது. ஒரு காட்சியில் கூட முழங்காலுக்குக் கீழே அவர் ஆடை அணியவேயில்லை. யாருப்பா அது காஸ்ட்டியூம் டிசைனர். அதிலும் பாடல் காட்சிகளில், சில கேமரா கோணங்களில் பார்ப்பதற்கே ‘பக்’ என்று இருக்கிறது. பரவாயில்லை, ஆஷ்னாவுக்காக அதிகம் செலவழித்திருக்க மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. ஆஷ்னாவுக்கு நேரெதிர் அகிலா கிஷோர். அப்படியே ஹை-ஸ்பீடில் நடக்கிறார், திரும்புகிறார், வெட்கத்துடன் சிரிக்கிறார், சில வசனங்கள் பேசுகிறார், சந்தானத்தை அதிகமாகவே நேசிக்கிறார். கொஞ்சமாக வந்தாலும் குடும்பக் குத்து விளக்காய் ரசிக்க வைக்கிறார். வழக்கம் போல சந்தானத்திற்குத் துணையாக விடிவி கணேஷ், சந்தானத்தின் தாய் மாமனாக தம்பி ராமையா, பெற்றோர்களாக ‘ஆடுகளம்’ நரேன், பிரகதி. சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். அடுத்தடுத்த படங்களில் தனி முத்திரையைப் பதிப்பார் என எதிர்பார்க்கலாம். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு காட்சிகளை பளிச்சென காட்டியிருக்கிறது. பொதுவாக நாயகர்களுக்கும், நாயகிகளுக்கும்தான் அதிகமான க்ளோஸ்-அப் காட்சிகள் வைப்பார்கள். இங்கு துணை கதாபாத்திரங்களுக்கெல்லாம் க்ளோஸ்-அப் வைத்து பயமுறுத்தியிருக்கிறார்.