இயக்குனர் பா இரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு, லிஜிஸ் நடிக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’.
இந்த படத்தின் முழு படப்பிடிப்பையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர்.
படம் பற்றி அவர் கூறுகையில்,
“பரியேறும் பெருமாள்’ என்னுடைய இரண்டாவது படம். முதல் படம் ‘மாலை நேரத்து மயக்கம்’. நான் பிறந்து வளர்ந்தது சென்னைதான். எனக்கு கிராமத்து வாழ்க்கை பற்றி அதிகமாக பரிச்சயம் இல்லை.
எனது முதல் படமும் நகரத்து கதை சார்ந்த படம்தான். ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார்தான் எனது குரு. அவரிடமிருந்து கற்றுக் கொண்ட விசயங்கள்தான் என்னை புதிதாக இயங்கச் சொல்கிறது. எனக்கு சில எழுத்தாள நண்பர்கள் இருக்கிறார்கள். வாசிப்பு அனுபவமும் கொஞ்சம் உண்டு. அந்த வகையில் என்னோடு அறிமுகமானவர்தான் இயக்குனர் மாரிசெல்வராஜ் .
‘பரியேறும் பெருமாள்’ கதையை கேட்டவுடன் இந்தக் கதைக்கு நாம் வழக்கமான ஒளிப்பதிவு செய்யாமல் கொஞ்சம் மெனக்கெ வேண்டும் என்கிற எண்ணம் வந்தது.
படப்பிடிப்பு முழுக்க, முழுக்க திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும் பகுதிகளில் நடந்தது. அந்த ஊர்களின் பசுமை, வறட்சி பகுதிகள், தெருக்கள், வெயில் மனிதர்கள், விலங்கினங்கள் அனைத்தையும் அப்படியே படம் பிடிக்க வேண்டும். கூடவே ஒரு அழகியலும் இருக்க வேண்டும் என்கிற ஆசை. கதைக்களம், அதன் வேகம், இதற்கு ஈடுகொடுக்க கிம்பல் எனும் தொழில் நுட்பத்தை முழுக்க முழுக்க படத்தில் பயன்படுத்தியிருக்கிறேன்.
40கிலோ எடைகொண்ட கிம்பல் கேமரா உபகரணங்களை தோளில் சுமந்து கொண்டு முழுப்படத்தையும் எடுப்பது சிரமமாக இருந்தாலும் படம் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருந்தது. பட்ட சிரமத்திற்கு பலன் கிடைத்திருக்கிறது.
கிராமத்து நிலமும் மக்களும் வாழ்வியலும் தினம் தினம் என்னை உற்சாகமூட்டியதும், தயாரிப்பாளர் பா. இரஞ்சித் அண்ணனின் ஒத்துழைப்பும், இயக்குனர் மாரி செல்வராஜ் தந்த ஒத்துழைப்பும் சவாலான வேலையை செய்து முடிக்க பெரும் உதவியாக இருந்தது.
எந்த இடத்திலும் அந்த நிலத்தின் கலர் மாறாமல் அதை அப்படியே கொண்டுவர முயற்சி செய்திருக்கிறோம். மனிதர்களோடு விலங்குகளும் இந்த படத்தில் நடித்திருக்கின்றன. அவற்றை படம் பிடிக்க கிம்பல் போன்ற உபகரணம் பெரிதும் உதவியது.
குடும்பத்தோடு பார்க்கக்கூடிய அழகான ஒரு படமாக வந்திருக்கிறது இந்தப் படம். திருநெல்வேலியின் நிஜ வெளிச்சத்தையும், அழகையும் இந்தப் படத்தில் பெரிதும் எதிர்பார்க்கலாம்,” என்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர்.