நல்லவன் தீயவனாக மாறும் ‘யானும் தீயவன்’…

பெப்பி சினிமாஸ் சார்பாக ஸோஃபியா ஜெரோம் மற்றும் பெப்பிட்டா ஜெரோம் இணைந்து தயாரிக்க பிரசாந்த் இயக்கும் படம் ‘யானும் தீயவன்’.

‘நாளைய இயக்குனர் சீசன் 3’ ல் பங்கேற்றவரும், இயக்குனர் ஹரியிடம் ‘சிங்கம் 2’ படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியவர் பிரசாந்த்.

முழுக்க முழுக்க கமர்சியல் ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படத்திற்கு, “யானும் தீயவன்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

புதுமுகம் அஷ்வின் செநீவ் கதாநாயகனாக அறிமுகமாக, வர்ஷா கதாநாயகியாக நடிக்கின்றார். முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடன கலைஞர் மற்றும் நடிகரான ராஜு சுந்தரம் நடிக்க இவர்களுடன் விடிவி கணேஷ், பொன்வன்னன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

படம் பற்றி இயக்குனர் பிரசாந்த் கூறியதாவது,

“முழுக்க முழுக்க கமர்சியல் ஆக்ஷன் திரில்லராக இப்படம் உருவாகி வருகிறது. தீயவர்களை எதிர்ப்பதற்காக ஒரு நல்லவன் தன்னையும் தீயவனாக மாற்றிக் கொண்டு அவர்களை எப்படி எதிர் கொள்கிறான் என்பதுதான் படத்தின் கதை. இப்படத்திற்காக ஆறடி உயர நாயகன் எங்களுக்குக் கிடைத்தார். ஆனால், அவர் ஜோடியாக நடிப்பதற்காக அவரை விட உயரம் குறைவான ஒரு நாயகியைத் தேடிக் கொண்டிருந்தோம். அப்போது கிடைத்தவர்தான் நாயகி வர்ஷா.

ஏன் உயரம் குறைவான நாயகியைத் தேடினோம் என்பதற்கு படத்தில் சில காட்சிகளையும் வைத்திருக்கிறோம். நாயகன் கட்டி அணைத்தால் அவர் கைக்குள் நாயகி அடங்க வேண்டும். ராஜு சுந்தரம் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பல தெலுங்குப் படங்களுக்கு இசையமைத்துள்ள அச்சு ராஜாமணி இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல்கள் படத்திற்கு பெரிய பலமாக அமையும் என்றும் ஒவ்வொரு பாடலும் புதிய கோணத்தில் எடுக்கப்பட்டுள்ளது,” என்கிறார் இயக்குனர் பிரசாந்த்.

படத்திற்கு ஒளிப்பதிவு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா, படத்தொகுப்பு பிரசன்னா.G.K. பாடல்களை பாடலாசிரியர்கள் கபிலன் மற்றும் மணி அமுதவன் எழுதியுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.

Read Previous

Radhika Apte officially confirms acting in Rajini film

Read Next

தம்பி ராமையா மகன் நாயகனாக அறிமுகம்…

Most Popular