தம்பி ராமையா மகன் நாயகனாக அறிமுகம்…

‘மைனா’ படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்ற தம்பி ராமையாவின் மகன்  உமாபதி ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

சில்வர் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக எஸ்.ரமேஷ்குமார் தயாரிக்க இன்பசேகர் இயக்கும் இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

நாயகன் உமாபதி ஜோடியாக தெலுங்கின் பிரபல கதாநாயகியான ரேஷ்மா ரத்தோர் நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். கருணாகரன், ஆடுகளம் நரேன், பாண்டியராஜன், மனோபாலா, தயாளன் ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.

“நாம் எவ்வளவுதான் புத்திசாலித்தனமாக கணக்குப் போட்டாலும், அதே பிரச்சனைக்கு வாழ்க்கை வேறு ஒரு கணக்கைப் போட்டு வைத்திருக்கும். பின்பு நமக்கு நடக்கும் நிகழ்வுகளை பார்த்து சிரிப்பதா இல்லை அழுவதா என்று புரியாத நிலைக்குத் தள்ளப்படுவோம். இதை படத்தின் மையக் கருத்தாக வைத்து விறுவிறுப்பும், நகைச்சுவையும் கலந்து உருவாக்கி வருகிறோம்.

இந்தப் படம் ஒரு காமெடிப் படம், நான் டிவியில பல நிகழ்ச்சிகள்ல வேலை பார்த்திருக்கேன். இந்தப் படத்தோட கதையை தயாரிப்பாளர் கிட்ட சொன்னேன். ரொம்பப் பிடிச்சிருந்து இந்தப் படத்தை ஆரம்பிச்சிருக்காரு.

ஆடியன்சை ரொம்ப சோதிக்காம அவங்க அந்த இரண்டரை மணி நேரமும் சந்தோஷமா படத்தை ரசிக்கணும்கற எண்ணத்துலதான் இந்தப் படத்தை உருவாக்கி வர்றோம்.

படத்தோட கடைசியிலதான் படத்தோட டைட்டிலுக்கு ஒரு அர்த்தத்தை வச்சிருக்கோம். அது படத்துக்கு அவ்வளவு பொருத்தமா இருக்கும். இந்தப் படத்துக்காக புதுமுகத்தை அறிமுகப்படுத்தணும்னுதான் நினைச்சேன். நாங்க நடத்தின ஆடிஷன்லதான் உமாபதி வந்து கலந்துக்கிட்டாரு. அப்புறம்தான் அவர் நான் தம்பி ராமையா மகன்னு சொன்னாரு. அப்புறம் அவரை நடிக்க வச்சிப் பார்த்தேன், எனக்குத் திருப்தியா இருந்து இந்தப் படத்துல ஹீரோவாக்கினேன்,” என்கிறார் இயக்குனர்.

நாயகனாக அறிமுகமாகும் உமாபதி கூறியதாவது,

“இஞ்சினியரிங் படிச்சி முடிச்சிருக்கேன், எனக்கும் சினிமாவுல நடிக்கணும்கற ஆசை இருந்துச்சி. முதல்ல நான் ரொம்ப ஒல்லியா இருப்பேன். அப்புறமா ஜிம்முக்குலாம் போயிட்டு உடம்பை ஏத்தி சினிமாவுக்கு ஏத்த மாதிரி மாத்திக்கிட்டேன்.

நடிப்புக்காக எந்த பயிற்சிக்கும் போக வேணாம்னு அப்பா சொன்னாரு. எனக்கு இப்ப எல்லாமே இயக்குனர்தான். அவர் என்ன சொல்றாரோ அதைக் கேட்டு நடிச்சிட்டு வர்றேன். அப்பா பேரைக் காப்பாத்தணும்,” என்கிறார் உமாபதி.

படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Read Previous

நல்லவன் தீயவனாக மாறும் ‘யானும் தீயவன்’…

Read Next

வரிசை கட்டும் “கத்தி, லிங்கா, காக்கா முட்டை”…

Most Popular