தமிழ்த் திரையுலகில் வாரத்திற்கு வாரம் பல சிறிய படங்களும், பல பெரிய படங்களும் வெளிவந்து கொண்டுதானிருக்கின்றன.
பெரிய படங்கள் பிரம்மாண்டமான விளம்பரங்களால் தட்டுத் தடுமாறியாவது ரசிகர்களை சென்றடைந்து விடுகின்றன. ஆனால், சிறிய படங்களுக்குத் தயாரிப்பாளர்களால் தொடர்ச்சியாக விளம்பரங்களைக் கொடுக்க முடிவதில்லை.
இருந்தாலும், ஒரு சில படங்கள் முதல் சில நாட்கள் செய்யப்பட்ட விளம்பரங்களாலும், படத்தைப் பற்றிய பாசிட்டிவ்வான பேச்சுக்களாலும் அடுத்தடுத்து பெரிதாக விளம்பரப்படுத்தப்படவில்லை என்றாலும் நன்றாக ஓடி வருகின்றன.
அந்த விதத்தில் கடந்த மாதம் 24ம் தேதி வெளிவந்த ‘ஆவி குமார்’ படம் கலகலப்பான காமெடி படமாக இருந்ததால் இரண்டாவது வாரத்தைக் கடந்தும் சுமார் 75 தியேட்டர்களில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது என திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தின் பல ஊர்களில், கடந்த வாரம் வெளிவந்த சில படங்களை எடுத்து விட்டு, ‘ஆவி குமார்’ படத்தை திரையிட்டுள்ளார்களாம்.
சமீபத்தில் வந்த சிறிய படங்களில் இந்தப் படம் நல்ல வசூலைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கிறார்கள்.
இம்மாதிரியான சிறிய படங்களுக்கு நல்ல வெளியீட்டுத் தேதியும், சரியான தியேட்டர்களும் கிடைத்தால் இது போன்ற பல சிறிய தயாரிப்பாளர்கள் தொடர்ந்து படங்களைத் தயாரிக்க முடியும் என படத்தின் நாயகன் உதயா நம்பிக்கையாகக் கூறுகிறார்.
இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்து நடிக்க உள்ள ‘உத்தரவு மகாராஜா’ படத்தின் படப்பிடிப்பை விரைவில் ஆரம்பிக்க உள்ளார் உதயா.