ஏமாற்ற அலையும் கூட்டம், ‘ஔடதம்’ நேதாஜி பிரபு குற்றச்சாட்டு

ரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ் நிறுவனம் சார்பில் நேதாஜி பிரபு தயாரித்து, நாயகனாக நடிக்க ரமணி இயக்கியுள்ள படம் `ஒளடதம்`.

மருத்துவ உலகின் மோசடிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் மெடிக்கல் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது .

இப்படத்தினை பிரபலப்படுத்தும் முயற்சியாக `ஒளடதம்` என்று பெயர் பொறித்த 3 லட்சம் பேனாக்களை திரையரங்குகளில் விநியோகிக்க உள்ளனர். அதற்கான அறிமுக விழாவாக பிரம்மாண்ட பேனா வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர்கள் பாக்யராஜ், பேரரசு, ஏ.வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலையில் பிரம்மாண்ட பேனா வெளியிடப் பட்டது. திரையரங்குகளில் பேனா தரும் போது` தமிழா தமிழில் கையெழுத்திடு` என்கிற பிரச்சாரத்தையும் மேற்கொள்ளவிருக்கிறது படக் குழு.

படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான நேதாஜி பிரபு பேசும் போது,

“நான் சினிமா எடுப்பது என்று முடிவு செய்தவுடன் புதிதாக ஏதாவது கதை எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். 2013-ல் ஒரு மருந்ததில் உள்ள மூலப்பொருள்கள் தவறானது என்று செய்திகள் வந்தன. அம்மருந்து தடை செய்யப்பட்டது. சில காலம் கழித்து அதே மருந்து தடை நீக்கம் செய்யப்பட்டது என விளம்பரம் வந்தது. இடையில என்ன நடந்தது ?. இது பற்றி யோசித்தேன் இக்கதை உருவாகியது.

நாம் சாப்பிடும் உணவுப் பொருள்கள் பற்றி நம்மிடம் உள்ள விழிப்புணர்வு, நாம் சாப்பிடும் மருந்துகள் பற்றி நம்மிடம் இல்லை. எவ்வளவோ தடை செய்யபபட்ட மருந்துகள் இங்கு தாராளமாக புழக்கத்தில் உள்ளன. இது பற்றிய விழிப்புணர்வு இங்கு இல்லை. நாங்கள் இப்படத்துக்காக ஒரு மருந்து தயாரிக்கும் கம்பெனியில் அனுமதி வாங்கி 8 நாட்கள் படமெடுத்துள்ளோம்.

படத்தில் 5 ஃபைட், 2 பாடல்கள் உள்ளன . ஒரு விஷயத்தை இங்கே பதிவு செய்தாக வேண்டும். இப்போது புதிதாகப் படமெடுக்க வருபவர்கள் படத்தைக் கூட போராடி எடுத்து விடுகிறார்கள். ஆனால் வெளியிடுவது அவ்வளவு சிரமமாக இருக்கிறது. எங்களை ஏமாற்ற இங்கே ஒரு கூட்டம் அலைகிறது.

தயாரிப்பாளர் கில்டிலோ, பிலிம் சேம்பரிலோ, தயாரிப்பாளர் சங்கத்திலோ ஒரு தயாரிப்பாளர் என்று மெம்பராகி இருக்கிறார்கள். அதைக்காட்டி உங்கள் படம் வெளியிட நான் உதவுகிறேன் என்று வருகிறார்கள். ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு நம்மிடம் காசு பிடுங்குகிறார்கள். அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது. ஆனால் பணத்தைக் கறந்து விடுகிறார்கள். அவர்களிடம் நான் ஏமாற்றப்பட்டதற்கு ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. இப்படிப்பட்ட விஷமிகளை சங்கத்திலிருந்து நீக்க வேண்டும்.

என்னைப் போன்ற புதிய தயாரிப்பாளர்கள் இப்படிப்பட்ட போலிகளிடம் சிக்கிக் கொண்டு தவிக்கிறார்கள். இந்த விஷமிகளை சினிமாவிலிருந்து விரட்டினால் தான் சினிமா உருப்படும்.

‘ஒளடதம்’ என தமிழில் பெயர் பொறிக்கப்பட்ட மூணு லட்சம் பேனாக்களை திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, சென்னை, செங்கல்பட்டு, சேலம் திரையரங்குகளில் வழங்க உள்ளோம். இதுவும் ஒரு புதிய முயற்சி, முயற்சி செய்வதில் எங்களுக்கு ஒரு சந்தோஷம்,” என்றார் நேதாஜி பிரபு.

இவ்விழாவில் பட நாயகி சமீரா, நடிகர் விஷ்ணுபிரியன், பட வில்லன் வினாயகராஜ், கவிஞர் தமிழமுதவன், நடிகை பாலாம்பிகா, விநியோகஸ்தர் எம்.சி.சேகர் , இணை தயாரிப்பாளர் அருண் ராமசாமி, பிஆர்ஓ யூனியன் செயலாளர் பெரு. துளசி பழனிவேல் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

Read Previous

சர்கார் – இசை வெளியீடு – விஜய் பேச்சு – வீடியோ

Read Next

விஜய் டிவியில் ‘அதே கண்கள்’ மர்மத் தொடர்

Most Popular