காப்பான் – சூர்யாவுக்கு விவசாயிகள் சங்கம் பாராட்டு

கே.வி.ஆனந்த் இயக்கத்தில், சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளியான படம் காப்பான்.

அப்படத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் படும் துயரத்தை வெளிப்படையாகக் காட்டியிருந்தார்கள். அதற்கு விவசாயிகள் மத்தியில் பெரும் பாராட்டு எழுந்தது.

படத்தில் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று குரல் கொடுத்து, அதை பிரதமர் மூலம் அறிவிக்கவும் வைப்பார் சூர்யா.

விவசாயிகளின் நலனுக்காகக் குரல் கொடுத்த நடிகர் சூர்யாவை தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் விவசாயிகளோடு நேரில் சந்தித்தார்.

பெரும் ஆபத்து சூழ்ந்திருக்கும் டெல்டா மாவட்டங்களின் நிலையை அப்பட்டமாகப் படமாக்கி, விவசாயிகளின் புரட்சிக் குரலாக முழங்கி இருக்கும் நடிகர் சூர்யாவையும் இயக்குநர் கே.வி.ஆனந்தையும் விவசாயிகள் பாராட்டினார்கள்.

கடைக்கோடி மக்களுக்கும் புரியும் வண்ணம் விவசாய பிரச்சினைகளை உரத்துச் சொல்லி, பெரிய அளவிலான கார்பரேட் நிறுவனங்கள் பின்னுகிற சதி வலைகளை அம்பலப்படுத்தி ‘காப்பான்’ படம் மிகப் பெரிய விவசாயப் புரட்சிக்கே வித்திட்டிருக்கிறது.
விவசாயிகள் நலனில் இவ்வளவு அக்கறையோடு காப்பான் படத்தில் பங்களிப்பு செய்த நடிகர் சூர்யாவுக்கும் இயக்குநர் கே.வி.ஆனந்துக்கும் விவசாயிகள் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் பாராட்டினார்கள்.

விவசாயத்தைச் சூழும் ஆபத்துகளை எதிர்த்து தொடர்ந்து போராடும் தங்களுக்கு காப்பான் படம் மூலமாக மிகுந்த நம்பிக்கையையும் உத்வேகத்தையும் சூர்யா ஏற்படுத்தி இருப்பதாகவும் சொன்ன விவசாய சங்க நிர்வாகிகள் டெல்டா மாவட்டங்களைப் பார்வையிடவும் அழைப்பு விடுத்தார்கள்.

Read Previous

பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் எம்ஜிஆர் மகன்

Read Next

தமிழ் சினிமா – செப்டம்பர் 27, 2019 வெளியாகும் படங்கள்

Most Popular