திரைக்கு வந்த வரவேற்பைப் பெற்ற ‘திருடன் போலீஸ்’, தற்போது தயாரிப்பில் இருக்கும் ‘ஒரு நாள் கூத்து’ ஆகிய படங்களைத் தொடர்ந்து கெனன்யா பிலிம்ஸ் செல்வகுமார் தயாரிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் ‘ப்ரூஸ் லீ‘.
இந்தத் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்க, நாயகியாக கீர்த்தி கர்பந்தா நடிக்கிறார். அறிமுக இயக்குநர் பிரஷாந்த் பாண்டி ராஜ் இப்படத்தை இயக்குகிறார். ஆக்ஷன் காமெடிப் படமாக உருவாக உள்ள இந்தப் படத்தில் பாலா சரவணன் , முனிஸ் காந்த் மற்றும் பலர் நடிக்கவுள்ளனர்.
‘ப்ரூஸ் லீ’ படத்தின் இயக்குநர் பிரஷாந்த் பாண்டிராஜ் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராகப் பங்கேற்றுள்ளார். அந்த சீசனில் நடுவர்களில் ஒருவராக இருந்த இயக்குநர் பாண்டிராஜிடம் “இது நம்ம ஆளு, ஹைக்கூ’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
குழந்தைகளை மையமாகக் கொண்டு படங்களை இயக்கி ரசிகர்களைக் கவர்ந்த இயக்குநர் பாண்டிராஜிடம் இருந்து வந்துள்ள பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கவுள்ள ‘ப்ரூஸ் லீ’ திரைப்படமும் குழந்தைகளைக் கவரும் வகையில் எடுக்கப்பட உள்ள திரைப்படமாகும்.
படத்துக்குப் படம் வெவ்வேறு வகையிலான களங்களில் பயணித்துக் கொண்டிருக்கும் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு இந்தப் படம் மிகவும் புதுமையான ஒரு படமாக இருக்கும், ஆக்ஷன் கலந்த காமெடி கதையில் முதன்முறையாக இந்தப் படத்தில் அவரை பார்க்கலாம்,” என்கிறார் இயக்குநர் பிரஷாந்த் பாண்டிராஜ்.
‘ப்ரூஸ் லீ’ படத்தின் பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றது. படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது.